ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்
தங்கள் நபியான முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் யூத மற்றும் கிறிஸ்தவர்களின் கறைபடுத்தப்பட்ட, காலாவதியான மத அமைப்புக்குப் பதிலாக புதிய சட்ட திட்டங்களோடு கூடிய ஒரு புதிய மதத்தை நிறுவுவதே என சில இஸ்லாமியர்களால் கூறப்பட்டது. இந்தக் காரணத்தினால், அனேக முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய செய்திக்கு எவ்வித கவனமும் செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவ மதமானது புதிய மற்றும் சிறந்த மதத்தினால் மேற்கொள்ளப்பட்டுவிட்டது, இஸ்லாம் என்ற மதம் கிறிஸ்துவுக்குப் பின் 600 வருடங்கள் கழித்து முஹம்மதுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிந்தனை இஸ்லாமியர்கள் அனேகருக்குள் பரவியிருந்தாலும், அது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆனின் போதனைக்கு எதிரானதாக இருக்கிறது.
குர்-ஆனின் படி, முஹம்மது அவர்கள் வந்த நோக்கம் முற்றிலும் ஒரு புதிய மதத்தை நிறுவுவது அல்ல, மாறாக ஆபிரகாமின் மதத்தில் தொடர்ந்து நிலைநிற்பது ஆகும்.
'(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. ஸூரத்துல் அந்நஹ்ல் (16):123.
எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை' என்று கூறுவீராக! ஸுரத்துல் அல் அன்ஆம் (6):161.
''அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):95.
'யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்' என்று கூறுகின்றனர். 'அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்று வோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் பகரா (2):135.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க் கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். ஸூரத்துல் அன்னிஸா (4):125
மேற்சொன்னவைகளைத் தவிர, குர்-ஆனும் கூட முகம்மது அவர்கள் புதிதாக எதையும் போதிக்க வரவில்லை எனச் சொல்கிறது. உண்மையைச் சொல்வதானால், ஏற்கனவே அருளப்பட்ட வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தும் படிக்கே அவருக்கு வெளிப்பாடு அருளப்பட்டது என குர்-ஆன் நமக்குச் சொல்கிறது. முன்னமே அருளப்பட்டதை திருத்தவோ, மாற்றவோ, அதில் சேர்க்கவோ அல்லது அதை செல்லாதது என அறிவிக்கவோ அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்படாமல், அவைகளை உறுதிப்படுத்தவே அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்பட்டது.
இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருக் கிறது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்ப தற்காகவும், நன்மை செய்வோருக்கு நற் செய்தி கூறுவதற்காகவும் அரபு மொழியில் அமைந்த வேதமாகும். (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது. ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):12
(முஹம்மதே!) உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.உமது இறைவன் மன்னிப்புடையவன்; துன்புறுத்தும் வேதனையுடையவன். ஸூரத்துல் ஃபுஸ்ஸிலத் (41):43.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். (ஸூரத்துல் அஷ்ஷூரா (42):13.
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை' எனக் கூறுவீராக! ஸுரத்துல் அல் அஹ்காஃப் (46):9
நம்பிக்கை கொண்டவர்களின் சமுதாயத்திற்கு தீர்க்கதரிசி மோசே மூலமாக தேவனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுக்க மற்றும் சமூகச் சட்டங்களின் அடிப்படையில் ஆபிரகாமின் மார்க்கம் விரிவுபடுத்தப்பட்டது என்பதைக் கவனிப்பது முக்கியமானது ஆகும். அதன் விளைவாக, இஸ்லாம் பொதுவில் காணப்பட்ட பல பழக்க வழக்கங்களை அதிலும் குறிப்பாக முஹம்மதுவின் வருகைக்கு முன் பல நூறாண்டுகளாக யூதர்கள் மத்தியில் இருந்த பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டது. வேதாகமத்தில் காணப்படுவதற்கொத்த இஸ்லாமிய பழக்கவழக்கங்களில் சில கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும் என்று சில முஸ்லீம்கள் நினைப்பதற்கு மாறாக, இவை ஒரு புதிய மதத்திற்கான புதிய சட்டதிட்டங்கள் அல்ல, அவை முன்னமே இருந்தவையாகும்.
- சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
- தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
- தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
- ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
- விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
- எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
- பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
- விருத்தசேதனம் (லூக்கா 2:21)
- முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
- நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
- பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
- பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)
ஆங்கில மூலம்: The Claim that Muhammad Came to Establish a New Religion
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
1/05/2013 10:23:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot