ஈசா குரான் இணையத்துக்கு இது தான் இஸ்லாம் இணையம் பதில் அளித்து உள்ளது
http://idhuthaanislam.blogspot.com/2007/08/blog-post_08.html
இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள்
இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள். பதில் - 4
ஜி. நிஜாமுத்தீன் - பரங்கிப்பேட்டை.
அன்பிற்குகந்த வாசகர்களுக்கு - குறிப்பாக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு,
இயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்காக எழுதப்பட்டு வரும் ஒரு தொடருக்கு ஒரு கிறிஸ்த்தவ நண்பர் அவரது வலைப்பூவில் மறுப்பெழுதுகின்றார். இயேசுவின் வரலாற்றை குர்ஆனையும் - பைபிளையும் வைத்து அலசிப் பார்க்கும் கட்டுரைதான் இது. குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள இதர வரலாற்று குறிப்புகளையோ சட்டங்களையோ இந்தத் தொடரில் நாம் விவாதிக்கப் போவதில்லை. அதையெல்லாம் எழுதத் துவங்கினால் இயேசுவின் வரலாற்று நோக்கத்திலிருந்து நாம் வெளியில் சென்று விடுவோம். நமக்கு மறுப்பளிக்கும் சகோதரர் தனது முதலாவது மறுப்புக் கட்டுரையில் துவங்கி பல இடங்களில் குர்ஆனை விமர்சிக்கின்றார். குர்ஆனிலிருந்து இயேசு சம்பந்தமான அவர், மற்றும் பின்னூட்டமிடுபவர்கள் எடுத்துக் காட்டும் விமர்சனைங்களை மட்டுமே நாம் பதிலுக்கு எடுத்துக் கொள்வோம்.
மற்ற மற்ற விமர்சனங்களுக்கு வேண்டுமானால் அவர் தனிபதிவிடட்டும். அதற்கு எங்கு எப்படி பதிலளிக்க வேண்டுமோ அதை நாம் செய்வோம். இதை நாம் குறிப்பிடுவதற்கு காரணம். அவரது மறுப்புக் கட்டுரையின் துவக்கத்திலேயே 'என் மறுப்பு' என்ற முதல் பாராவில் ''சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம். குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது. '' என்று எழுதுதியுள்ளார்.
குர்ஆன் குறித்த உங்களின் சந்தேகங்களை - ஆட்சேபனைகளை தனிப்பதிவில் வையுங்கள். அதை நாம் அங்குப் பேசிக் கொள்ளலாம். இந்தப் பதிவை இயேசுவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நமது கருத்தாடல் ஒரே சீராக செல்லும் வாய்ப்பு ஏற்படும். வாசகர்களுக்கும் பலனிக்கும். உங்கள் மறுப்புத் தொடரில் இயேசு பற்றிய விபரங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்வோம். மற்றவற்றை கண்டுக் கொள்ள மாட்டோம் என்பதை இப்போதே கூறிக் கொள்கின்றோம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
நாம்:
சமூகமும் - இயேசுவின் பிறப்பும்.
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.
அவர்கள் (மறுப்பு)
சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.
அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3 16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். 16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆதியாகமம் 16:4-5 16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள் 16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
ஆதியாகமம் 16:6 16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
கர்த்தருடைய தூதனானவர் கூட 'ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்' சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார். ஆதியாகமம் 16:7-8 16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு, 16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12
முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு 'துஷ்டமனுஷனாக இருப்பான்' என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார். ஆதியாகமம் 16:9-12 16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். 16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார். 16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. 16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
நாம்:
வாசகர்களே மிக கவனமாக இந்தத் தொடரை படித்து வாருங்கள்.
மறுப்பாளர் தனது முதலாவது மறுப்புப் பதிவிலேயே ஆகாரையும் (ஹாஜர்) இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) குறித்து பைபிளைக் கோடிட்டுக் காட்டுகிறார். அதனால் நாம் 'பைபிள் புழகும் இஸ்மவேல்' என்ற கட்டுரையைப் பதித்தோம். அதில் இஸ்மவேல் குறித்த பைபிளின் வாசகங்களையும் ஆகார் ஆப்ரகாமின் அங்கீகரிக்கப்பட்ட மனைவி என்பதை பைபிள் ஒப்புக் கொள்வதையும் எடுத்து காட்டி இருந்தோம். மறுப்பெழுதும் சகோதரரின் முதல் மறுப்பையும் - நமது பைபிள் புகழும் இஸ்மவேல் கட்டுரையையும் படித்து விட்டு தொடரும் மறுப்பாளரின் வாதங்களைப் பாருங்கள்.
'*உண்மையில் இஸ்மவேலின் வரலாற்றைச் சொன்னதே கிறிஸ்தவம் தான். இஸ்மவேலுக்கு எத்தனை பிள்ளைகள், அவர்கள் பெயர் என்ன? அவர் யாரை திருமணம் செய்துக்கொண்டார், எத்தனை வயது இருக்கும் போது மரித்தார், என்று பல விவரங்களை உலகிற்கு பைபிள் தான் சொன்னது.
இந்த வசனங்கள் பைபிளின் தேவன் ஆகாருக்கும், இஸ்மவேலுக்கும் காட்டும் அன்பு, பரிவு, பாதுகாப்பு போன்றவற்றைக் காட்டுகிறது. இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கிறது. இதில் இறைவனின் சிறப்பு தான் மேலோங்கி நிற்கிறது. தன் படைப்பின் மீது அன்பு காட்டுவது இறைவனின் இயல்பு. சரி, விசுவாசத்தின் தந்தை என்று கிறிஸ்தவர்கள், யூதர்கள் சொல்லும் 'ஆபிரகாமின் மகனுக்கு' நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம். இஸ்மவேல் சிறந்தவர் தான். நாங்களும் அவருக்கு மதிப்புத் தருகிறோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவன் அந்த பிள்ளையோடு இருந்தார் என்று நாங்கள் வாசிக்கிறோமே, தேவனே அவரை ஆசீர்வதித்து இருக்க, நாங்கள் எம்மாத்திரம் சொல்லுங்கள். இஸ்மவேலோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் பிரச்சனை அல்லது கருத்து என்னவென்றால், தேவன் செய்த உடன்படிக்கை ஈசாக்கோடு மட்டும் தான் என்பது. அவ்வளவு தான். இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரன் தான், இன்னும் ஆபிரகாமுக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள் தான்.
ஆனால், தேவன் கொடுத்த உடன்படிக்கை ஈசாக்கோடு என்றுச் சொல்கிறோம். இஸ்மவேலை நாங்கள் அவமதிக்க வில்லை. பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளையோடு இறைவன் இருந்தார் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்கள் சொல்லுங்கள், இப்போது நீங்கள் சொன்னது போல, 'ஆகாரையும், இஸ்மவேலையும்' பாலை வனத்தில் விட்டு ஆபிரகாம் சென்றாரா? அல்லது மக்காவரையில் அழைத்துச் சென்று 'ஆபிரகாமும் அவர்களோடு' காபாவை புதுப் பித்தாரா? **
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். **இஸ்மவேல் ஆபிரகாமின் மகன் இல்லை என்றுச் நாங்கள் சொல்லவில்லை. தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கு மூலம் தான் நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார் என்றுச் சொல்கிறோம்.
பைபிள் வசனத்தை நன்றாக பாருங்கள்: 'அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்' 'இவருடைய கை எல்லாருக்கும் விரோதமாக இருக்கும்' என்றால், இவர் சண்டை பொடுவார் என்று பொருள் கொள்ளலாம், சரி அதை அடுத்து படியுங்கள் ' எல்லாருடைய கை இவருக்கு விரோதமாக இருக்கும்' மற்றவர்களும் இவரைச் சுற்றி உள்ளவர்களும் இவரோடு சண்டை போடுவார்கள் என்று பொருள் வருகிறது அல்லவா? இங்கு சொல்லப்பட்டது இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு போல)என்பதே தவிர, இவர் மட்டும் கொடுமைக்காரர் என்று அல்ல.
இஸ்மவேலை விடும், ஆபிரகாமைப் பாரும், இவரின் வம்சத்தில் வந்தவர் தானே முகமது கூட (இஸ்லாம் படி, நான் நம்புவது, நம்பாதது அது வேறு விஷயம்), அப்படி இருந்தும், நாங்கள் 'முகமதுவை' நபியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயேசுவின் வம்சவரலாறு உமக்கு தெரிந்து இருக்கும், அவர் வந்த வம்சம் எப்படிப் பட்டது. தாவிது, தன் சிப்பாயின் மனைவியோடு விபச்சாரம் செய்தான், தேவன் அவன் குழந்தையை மரிக்கச் செய்தார். சாமுவேல் பல மனைவிகளை கொண்டான், தேவனுக்கு தூரமாகச் சென்றான், பிறகு மனம் திரும்பி வந்தான். இப்படி பலபேர் எனவே, 'வம்சத்தை பார்த்து கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, வந்தவரைப் பார்த்து விசுவாசிக்கிறோம்'.
நாம் (பதில்)
கிறிஸ்த்தவ உலகம் எப்போதுமே இஸ்மவேலைக் கண்டுக் கொள்வதில்லை. கண்டுக் கொண்டால் 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20) என்ற பைபிள் வசனத்தை நம்பினால் அந்த வசனத்தின் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்தால் தாங்கள் பாதுகாத்து வரும் தேவன் சுதன் பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கொள்கைக்கு ஆபத்து வந்து விடுமே என்ற பயம் அவர்களிம் இருக்கவே செய்கின்றது.
இஸ்மவேலைப் பற்றி நாம் எழுதியவுடன் இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கின்றது மாறாக இறைவனின் சிறப்புதான் மேலோங்கி நிற்கின்றது என்று குறிப்பிட்டு விட்டு அடுத்த வரிகளில் இஸ்மவேல் சிறந்தவர் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சகோதரா... ஒருவகையில் பார்த்தால் இந்த உலகில் யாருக்கும் எந்த சிறப்பும் இல்லை. முஹம்மதுவாகட்டும், இயேசுவாகட்டும், நீங்களும் நாங்களும் நம்பும் இன்னபிற தீர்க்கதரிசிகள் ஆகட்டும் இவர்களில் யாருக்கும் சிறப்பு இல்லை. இறைவனைத் தவிர.
இறைவனின் சிறப்பைத் தெளிவாக உணர்ந்ததால் தான் இயேசுவையோ இன்னப் பிற மனிதர்களையோ இறைவனின் வாரிசு என்று கொண்டாடாமல் அனைவரும் இறைவனின் அடிமை என்று இஸ்லாம் சொல்கின்றது. நாங்களும் அதை உரத்துக் கூறுகின்றோம். சிறப்புக்குரியவர்கள் இறைவனா பிற மனிதர்களா என்றத் தோரணையில் எழுதுவதாக இருந்தால் இந்தக் கட்டுரைகளேத் தேவையில்லை. எனவே அத்தகைய வாதங்களை வைக்க வேண்டாம்.
கர்த்தர் ஒருவரை சிறப்பித்திருக்கும் போது இது அவருக்குரிய சிறப்பல்ல என்று மறுப்பது இறை நிராகரிப்பாகி விடும். கர்த்தர் யாரை சிறப்பித்துள்ளாரோ அவரை நாமும் சிறப்பிக்க வேண்டும். 'கர்த்தர் சிறப்பித்துள்ளது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை எங்களுக்கு பிடித்திருந்தால் தான் நாங்கள் சிறப்பிப்போம் இல்லையெனில் புறக்கணிப்போம்' என்றத் தோரணை கிறிஸ்த்துவத்தில் பதிந்துள்ளதால் தான் இஸ்மவேலையோ அவர் குறித்த கர்த்தரின் வார்த்தைகளையோ கிறிஸ்த்தவம் கண்டுக் கொள்ளவில்லை.
எங்கள் கேள்வி 'நான் அவனை ஆசிர்வதித்து நான் அவனை அதிகமாக பல்கி பெருகவும் செய்வேன். பெரிய ஜாதியாக்குவேன்' என்ற கர்த்தரின் வாக்குக்கு பொருள் என்ன? மனிதர்கள் பல்கிப் பெருகுவதும் பெரும் சமூகங்களாக மாறுவதும் சராசரியாக நடக்கக் கூடியதுதான். இது இறைவனின் பொதுவான ஏற்பாடாகும். ஒரு மனிதரை ஆசிர்வதித்து அவனது சந்ததிகளை பெருக செய்வதென்பது சிறப்பானதாகும். இஸ்மவேல் எவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்டார். உங்களிடம் பதில் உண்டா? அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12) இதுதான் அவனை ஆசிர்வதித்ததன் அர்த்தமா...? உங்களையும் என்னையும் கர்த்தர் ஆசிர்வதித்தால் நாம் இப்படித்தான் இருப்போமா...? சிந்தியுங்கள்.
''"துஷ்ட மனுஷன்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள், ஆங்கிலத்தில் அது "Wild Man" என்றும், "Wild Donkey" என்றும் உள்ளது. இந்த வசனத்தில் சொல்லப்பட்டது, ஒரு மனிதன் வளர்க்கும் தன் கழுதை எப்படி முரட்டாட்டம் பிடிக்குமோ, அப்படி "முரடணாக" இருப்பார் என்று ஒரு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
இறைவன் ஆசிர்வதித்தப் பிள்ளையை இத்தகைய உவமைகளால் கேவலப்படுத்துவது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அதிலிருந்து விலகிக் கொள்கின்றோம்.
தாவீது லோத்து உட்பட பல்வேறு நல்ல மனிதர்களை விபச்சாரர்களாகவும் - மது உட்கொண்டு சொந்த மகளோடு படுத்து எழுந்தவர்களாகவும் (இதுபற்றி விரிவாக நாம் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்) பைபிள் விவரிக்கின்றது. அத்தகைய ஒரு போக்கு, இஸ்மவேல் வம்சத்தை கெட்டவர்களாக காட்டவேண்டும் என்ற எண்ணமே இஸ்மவேலை துஷ்டனாக சித்தரிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டவர் இஸ்மவேல். கர்த்தர் ஆசிர்வதித்தார் என்றால் அதன் அர்த்தம் என்ன?பைபிளின் வார்த்தைகளைப் பார்ப்போம்.
ஆதியாகமம் 1:22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 5:2 தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதியாகமம் 5:2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
ஆதியாகமம் 12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
ஆதியாகமம் 17:16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
ஆதியாகமம் 25:11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
ஆதியாகமம் 28:3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;
எண்ணாகமம் 22:12 அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
நாம் எடுத்துக் காட்டியுள்ள இந்த பைபிளின் வசனங்கள் அனைத்தும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்ட்டவர்களை புகழ்ந்து சொல்கின்றது. முக்கியமாக கடைசியில் இடம் பெற்றுள்ள எண்ணாகமத்தின் 22:12 வசனம் 'கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களை சபிக்க வேண்டாம்' என்று அறிவிக்கின்றது. உண்மையில் பைபிள் வசனங்களை நம்பக்கூடியவர்கள் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்மவேலை மதித்து நடப்பார்களேத் தவிர பிறகு திணிக்கப்பட்ட *இஸ்மவேல் துஷ்டன**அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்* என்பதை உண்மை என்று நம்பி அதற்கு புது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
கர்த்தர் இஸ்மவேலை ஆசிர்வதித்தார் என்பதே அவர் சந்ததி வழியாக அரபுலகில் ஏற்படப் போகும் ஒரு தீர்க்க தரிசன அடையாளத்தின் அத்தாட்சியாகும். இதை நாம் வெறும் கற்பனையாக சொல்லவில்லை.
தொடருங்கள்.
ஆப்ரகாம் பலியிட துணிந்தது ஈசாக்காக இருக்க முடியாது அது இஸ்மவேல் தான் என்பதை பைபிள் வசனத்தை எடுத்துக் காட்டி எழுதினோம்.
இஸ்மவேலை தள்ளியே வைக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்களால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நமது கட்டுரைக்கு மறுப்பெழுதினார்கள்.
அவர்கள்
இஸ்லாமிய நண்பரே, ஆதியாகமம் 21ம் அதிகாரத்திலேயே, ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் தனியே அனுப்பிவிட்டார், அதுவும் அசீர்வதித்து அனுப்பிவிட்டார், நீர் சொல்வது போல இஸ்மவேலை சிறப்பித்து, அனுப்பிவிட்டார். இதை ஆபிரகாமே செய்தார். நீர் கூட இந்த கட்டுரையின் முதலில், பைபிள் சிறப்பித்த இஸ்மவேல் என்றுச் சொல்லி, அந்த வசனங்களை சொல்லியிருந்தீர்.
ஈசாக்கை பலியிடச் சொன்னது ஆதியாகமம் 22ம் அதிகாரம். இஸ்மவேலை தேவன் ஆசீர்வதிப்பேன் பிரபுக்களை உண்டாக்குவேன் என்றுச் சொல்லிவிட்ட பிறகு நடந்த விவரங்கள். எனவே ஆதியாகமம் 22:2ம் வசனத்தில் சொன்ன 'ஏகசுதன்' இஸ்மவேல் இல்லை 'ஈசாக்கு' தான். இனி உம் விருப்பம்:
1) பைபிளில் இஸ்மவேலை தேவன் பாலைவனத்தில் பிள்ளையோடு இருந்து ஆசீர்வதித்தார் என்பதை நம்புவீரோ (ஆதியாகமம் 21ம் அதிகாரம்)
அல்லது, 2) இந்த பலியிட்டது (ஆதியாகமம் 22ம் அதிகாரம்) இஸ்மவேல் என்பதை நம்புவீரோ இனி எல்லாம் உம் கையில்.
பலியிட்டது 'இஸ்மவேல்' என்றுச் சொன்னீர் என்றால், இந்த உம்முடைய கட்டுரையின் 'கருவே - பைபிள் புகழும் இஸ்மவேல்' பாதிக்கப்படும் அல்லது பொய்யாகிவிடும். இஸ்மவேலை பைபிள் புகழும் வசனங்கள் நீர் காட்டியது, பாலை வனத்தில் ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் ஆசீர்வதிக்கும் போது சொன்ன வசனம்.
நாம்:
மறுப்பாளர் என்ன சொல்ல வருகிறார் என்றால் ஆகாரையும் இஸ்மவேலையும் ஆப்ரகாம் அனுப்பி விட்ட பிறகே கர்த்தர் தகனபலி பற்றிக் கூறுகிறார் (இதற்கு ஆதாரம்) தகனபலி சம்பவம் அடுத்த அத்தியாயத்தில் வருகின்றது. இஸ்மவேல் இல்லாத போது இந்த வசனம் பேசுவதால் இது ஈசாக்கை குறித்துதான் சொல்லப்பட்டுள்ளது. (அவர் எழுத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்)
(பைபிள் முஹம்மத் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்டு விட்டது..... என்றெல்லாம் அவரின் விளக்கத்தை நாம் இங்கு தொட்டுப் பார்க்கவில்லை. 'பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு வரும் போது இந்த வாதங்களின் நியாயத்தை அங்குப் பார்ப்போம்)
பைபிளை கர்த்தரின் வார்த்தை என்று உண்மையில் நம்பினால் கர்த்தரின் வார்த்தைகளுக்குரிய மதிப்பும் மரியாதையும் அவர்களிடம் வெளிப்பட வேண்டும் என்று சொல்லி வைக்கின்றோம்.
பைபிள் எந்த நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகவும் இருக்கட்டும். பிரச்சனையில்லை. 'ஏகசுதன்' என்ற வார்த்தைக்கு பொருள் என்ன அதுதான் முக்கியம்.
அடுத்த அத்தியாயத்தில் வந்துள்ளதுதான் 'ஏகசுதன்' என்பதன் அர்த்தத்தை தீர்மானிக்கும் அளவுகோலா... இஸ்மவேல் சென்ற பிறகு அந்த வார்த்தையை கர்த்தர் பயன்படுத்தி இருந்தால் 'ஏகசுதன்' என்று பயன்படுத்தி இருக்க முடியாது. வேறு குழந்தைகளே இல்லாத போதுதான் அந்த வார்த்தையைப பயன்படுத்த முடியும்.
சாதாரண நடைமுறையில் கூட நாம் இப்படி சொல்ல மாட்டோம். ஒருவருக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து அடுத்தக் குழந்தை பிறந்தால் கூட 'இவரின் ஒரேக் குழந்தை' என்று சொல்ல மாட்டோம். இரண்டாம் குழந்தை என்றுதான் சொல்லுவோம்.
இஸ்மவேல், அதிலும் ஆப்ரகாமின் மகன் இஸ்மவேல் உயிரோடு இருக்கும் போது ஈசாக்கை ஒரேக் குழந்தை என்று கர்த்தர் எப்படி சொல்லி இருக்க முடியும்? இலக்கணப் பிழையுள்ளவரா கர்த்தர்.
கட்டுரையாளர் உட்பட பிற கிறிஸ்த்தவர்களும் 'தகனபலியாக சொல்லப்பட்டவர் ஈசாக்தான்' என்று நம்புவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1) பைபிளில் ஈசாக் பெயர் தான் சொல்லப்பட்டுள்ளது என்பதாகும்.
2) இஸ்மவேலை ஆப்ரகாம் அனுப்பி விட்ட பிறகு இது சொல்லப்பட்டதால் இது இஸ்மவேலை குறிக்காது என்ற கருத்து.
இதில் முதலாவது கருத்து, பைபிளின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையால், ஆய்வுக்குட்படுத்தப்படாத நம்பிக்கையால் உருவானதாகும். அது நம்முடைய கருத்துப்பரிமாற்றத்திற்கு சம்பந்தமில்லாததாகும்.
ஆய்வுக்குட்படுத்தி சொல்லப்பட்ட இரண்டாம் கருத்தின் நிலையை நாம் அலசுகிறோம். 'பைபிளில் கர்த்தரின் வார்த்தைகள் மத குருக்களின் தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளப்பட்டாலும் உண்மையை விளக்கும் பல்வேறு வசனங்கள் அவர்களையுமறியாமல் இடம் பெற்று விட்டன. 'ஏகசுதன்' என்ற வார்த்தையை அவர்கள் சிந்தித்திருந்தால் ஒருவேளை அதையும் நீக்கி அல்லது பிற வார்த்தைகளைக் கூட்டி இருக்கலாம்.
ஈசாக் பிறப்பதற்கு முன்பே ஆப்ரகாமிற்கு கர்த்தர் இந்த சோதனையை வைத்திருந்தால் தான் ஏகசுதன் என்பதற்கு அர்த்தம் இருக்க முடியும்.
ஈசாக் பிறந்து விட்ட பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அப்ரகாம் தகப்பனாகிவிட்ட பிறகு 'ஏக - ஒரே, சுதன் - மகன் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை எண்ணிப்பார்த்தால் அவர்கள் தங்கள் பிடிவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.
நமக்கு மறுப்பெழுதும் சகோதரரின் இன்னுமொரு அறியாமையையும் (இந்த அறியாமை அனேக கிறிஸ்த்தவர்களிடம் இருக்கின்றது) சுட்டிக் காட்ட வேண்டும். ஆகாரையும் - இஸ்மவேலையும் ஆப்ரகாம் பாலைவனத்தில் விட்டு விட்டு வந்து விட்டார். அவர்களை அனுப்பி விட்டார் என்றே எழுதுகிறார்கள். (அதாவது இந்த சம்பவத்திற்கு பிறகு ஆப்ரகாமுக்கும் - .இஸ்மவேலுக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகாரையும் - இஸ்மவேலையும் அனுப்பியதோடு சரி ஆப்ரகாமின் வேலை முடிந்து விட்டது என்றத் தோரணையில்) அதனால் தான் ஆப்ரகாமும் - இஸ்மவேலும் கஃபாவை புதுப்பித்தார்கள் என்று இஸ்லாம் சொல்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பைபிளை ஊன்றிப் படித்தால் ஆப்ரகாம் கடைசி வரை அவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார் என்பதைக் கண்டுக் கொள்ளலாம்.
அதைப் பார்ப்போம். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். ஆதியாகாமம் 21:14
பெயர்செபா என்ற வனாந்தரத்தில் ஆகாரும் - இஸ்மவேலும் வாழத்துவங்கினார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். இதன் பிறகு இடம் பெயர்ந்து பாரான் வனாந்தரம் செல்கிறார்கள்.
பெயர்செபாவிற்கும் ஆப்ரகாமிற்கும் இருந்த தொடர்பை பைபிள் வசனங்கள் விளக்குகின்றன.
அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான். அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான். அவர்கள் இருவரும் அவ்விடத்தில், ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது. அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். ஆதியாகாமம் 21:27-33
பெயர்செபாவில் தோப்பை உண்டாக்கி தேவனை வணங்கி வரும் அளவிற்கு ஆப்ரகாம் பெயர்செபாவில் இருந்துள்ளார். (அதாவது தன் மனைவி மற்றும் இஸ்மவேலுடன் இருந்துள்ளார்)
ஆப்ரகாமுக்கும் அவரது இரண்டாம் மனைவி மற்றும் முதல் குழந்தைக்கு மத்தியில் இருந்த தொடர்பை எடுத்துக் காட்டவே இந்த வசனங்கள்.
இதோடு இந்தத் தொடர்பு முடிந்து விடவில்லை. ஆப்ரகாம் தனது கடைசிக்காலம் வரை அவர்களோடு தொடர்பில் இருந்தது மட்டுமில்லாமல் தனது இளைய மகன் ஈசாக்கையும் அவர்களோடு தொடர்பில் தான் வைத்திருந்தார். ஈசாக்குக்கு தன் அண்ணன் இஸ்மவேலுடன் பல ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது என்பதையும் பைபிளின் கீழுள்ள வசனத்தை சிந்திக்கும் போது சந்தேகத்திற்கிடமின்றி விளங்கலாம்.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)
தன் தந்தை இறந்த பிறகு அண்ணன் தம்பி இருவருமே சேர்ந்து தன் தந்தையை அடக்கம் செய்துள்ளார்கள் என்ற சம்பவம் எதைக் காட்டுகின்றது?ஆப்ரகாமின் இரு குடும்பங்களுக்கு மத்தியில் எந்த தொடர்பும் இல்லாமல் போனால் (தொடர்பு இல்லை என்று கருதிதான் ஈசாக்கை 'ஏகசுதன்' என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்) ஆப்ரகாமின் மரணம் இஸ்மவேல் குடும்பத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.
இரு சகோதரர்களும் ஒற்றுமையாக இருந்து தன் தந்தையின் உடலை அடக்கம் செய்யும் அளவிற்கு நெருக்கமான தொடர்பு இரு குடும்பங்களுக்கு மத்தியில் - குறைந்த பட்சம் இரு சகோதரர்களுக்கு மத்தியில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட கூடுதலான சான்றுத் தேவையில்லை.
ஆகார் இஸ்மவேலுடன் ஆப்ரகாமிற்கு இருந்த இந்த தொடர்பைக் கருத்தில் கொண்டு திருக்குர்ஆனில் இடம் பெறும் இப்ராஹீம் - இஸ்மாயீல் இருவரின் சம்பவங்களை கிறிஸ்த்தவ சகோதரர்கள் அணுகினால் அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசத்தைப் பெறுவார்கள்.
இதன் தொடர்ச்சியாக குர்ஆனில் இடம் பெறும் ஆப்ரகாம் - இஸ்மவேல் சம்பவங்களைப் பார்ப்போம்.
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (இஸ்மவேலையும் - ஈசாக்கையும்) முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன் அல்-குர்ஆன் 14:39
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (அல் குர்ஆன் 14:37)
அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)(அல்-குர்ஆன் 2:127,128,129)
பாலைப் பெருவெளியில் தன் குடும்பத்தாருடன் இருந்த காலகட்டங்களில் ஆப்ரகாம் தன் மகன் இஸ்மவேலுடன் சேர்ந்து புதுப்பித்ததுதான் கர்த்தரின் ஆலயமான கஃபா.குழந்தை இஸ்மவேலுக்கு தண்ணீர் குட்டைதான் இன்று வரையில் கோடான கோடி மக்கள் குடித்து வரும் மக்காவில் இருக்கும் 'ஸம் ஸம்' என்ற பெரு நீரூற்று. அந்தப் பகுதியில் குடியிருந்து அந்தப் பகுதியின் வளங்களுக்காக பாடுபட்டு அந்த பகுதியின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த மக்களின் அநாகரிகமான வாழ்க்கையைக் கண்டு அவர்களை சீர்திருத்தப்பாடு பட்டு தங்களுக்குப் பிறகும் தங்கள் பணியை செய்ய கர்த்தரின் புறத்திலிருந்து தீர்க்கதரிசி வரவேண்டும் என்று கர்த்தரிடம் பிரார்த்தனை புரிந்தவர்கள் தான் ஆப்ரகாமும் இஸ்மவேலும்.
அதன் தொடர்ச்சியாகவே முஹம்மத் அவர்கள் அரபுலகில் பிறக்கிறார்கள். கர்த்தர் அவரை தன் பணிக்காக நியமிக்கின்றார். இதை உறுதிபடுத்தும் பைபிளின் ஆதாரத்தை அடுத்தப் பதிவில் காண்போம். (கர்த்தரின் நாட்டம் இருக்கட்டும்)