TNTJ தலைவரும்,இஸ்லாம் அறிஞருமான பி.ஜெய்னூல்ஆபிதீன்(பிஜே) அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்: அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2
முன்னுரை: பிஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் உள்ள "அற்புதம் நிகழ்த்தியது எப்படி? " என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விக்கு, பாகம் 1ல் பதில் அளித்துள்ளேன்.
படிக்கவும் பாகம் -1: பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1
இந்த இரண்டாம் பாகத்தில், "அற்புதம் நிகழ்த்தியது எப்படி ?" என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுதிய மற்ற விவரங்களுக்கு பதிலை பார்க்கலாம்.
பிஜே அவர்கள் எழுதியது:
அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருதே நாம் அளிப்போம்.
நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) Source : Source: http://www.onlinepj.com/book/mahana8.htm
ஈஸா குர்ஆன் பதில்:
பிஜே அவர்கள் பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். "நான் என் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை " என்று இயேசு சொன்ன வார்த்தைகள், அவரது தெய்வீகத் தன்மையை அவரே மறுப்பதாக அர்த்தமில்லை. பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அது பறைசாற்றுகிறதாக இருக்கிறது. அதாவது பிதாவிற்கு எது சித்தமோ அதை குமாரன் செய்வார்.
இதை இன்னும் விவரமாக புரிந்துக்கொள்ளவேண்டுமானால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட யோவான் 5:30ம் வசனம் சொல்லப்பட்ட சந்தர்பத்தில் இயேசு வேறு என்ன என்ன சொல்லியுள்ளார் என்று கவனித்தால் புரியும். பிதாவிற்கும் குமாரனுக்கும் தனித்தனி சித்தங்கள் இல்லை, இருவரின் சித்தங்களும் ஒன்று தான், அதாவது மனிதனுக்கு இரட்சிப்பை கொடுத்து தன்னோடு சேர்த்துக்கொள்வது.
1) பிதா கிரியை செய்வது போல இயேசுவும் கிரியை செய்கிறார்:
பிதா எப்படி கிரியை செய்கிறாரோ அப்படியே தானும் கிரியை செய்கிறார் என்று இயேசு சொல்கிறார். இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், அல்லா எப்படி கிரியை செய்வாரோ அப்படியே நானும் செய்கிறேன் என்று யாராவது சொன்னதுண்டா? சாதாரண மனிதனோ, அல்லது நபியோ சொல்லமுடியுமா?
இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், பழைய ஏற்பாட்டை கரைத்து குடித்த யூத ஆசாரியர்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது, இவன் ஏன் தன்னை பிதாவிற்கு சமமாக பாவிக்கிறான் என்றுச் சொல்லி, இயேசுவை கொலை செய்ய வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தார்கள் இந்த யூத குருமார்கள்.
யோவான் 5:16. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக்கொலைசெய்ய வகைதேடினார்கள்.17. இயேசு அவர்களை நோக்கி, என்பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்து வருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதாஎன்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே , யூதர்கள் அவரைக்கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
2) பிதா எவைகளை செய்வாரோ, அவைகளை அப்படியே குமாரனும் செய்வார்:
இயேசு ஒரு நபியாக மட்டும் இருந்தால், இது எப்படி சாத்தியமாகும்? அதாவது பிதா எவைகளை செய்வாரோ அவைகளைப் பார்த்து, அதே போல குமாரனும் செய்வார் என்று இயேசு எப்படி சொல்கிறார்?
இறைவன்(அல்லா) எவைகளை செய்வாரோ அவைகளை எல்லாம் இயேசு "அப்படியே" செய்வேன் என்றுச் சொல்கிறார். இறைவனுக்கு சமமாக யார் இப்படி சொல்லமுடியும்?
யோவான் 5:19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி,வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்
John 5: 19 Jesus gave them this answer: "I tell you the truth, the Son can do nothing by himself; he can do only what he sees his Father doing, because whatever the Father does the Son also does. (NIV)
John 5:19 Then Jesus answered and said to them, "Most assuredly, I say to you, the Son can do nothing of Himself, but what He sees the Father do; for whatever He does, the Son also does in like manner. (NKJV)
ஆங்கில மொழிபெயர்ப்பில் பாருங்கள், whatever the Father does the Son also does. (NIV) என்று மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்? "அல்லா செய்யும் எல்லா வேலையும் என்னால் செய்யமுடியும் என்று ஒருவர் சொன்னால் " அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
ஒன்று, இயேசு இறைவனுக்கு (அல்லாவிற்கு) சமமானவராக இருக்கவேண்டும்
அல்லது
இவர் (இயேசு) ஒரு "மனநிலை சரியில்லாதவராக" இருக்கவேண்டுமே தவிர , இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. எந்த தீர்க்கதரிசியும் தன்னை இறைவனுக்கு சமமாக பேசமாட்டார்.
கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவன் என்று நம்புவது இதனால் தான்.
3) பிதா மரித்தோரை எழுப்புகிறது போல, இயேசுவும் தமக்கு சித்தமானவர்களை எழுப்புவாராம்:
எப்படி பிதா மரித்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறாரோ அதே போல இயேசுவும் தனக்கு விருப்பமானவர்களுக்கு அவர்கள் மரித்து இருந்தாலும் உயிர் தருவாராம்.
இப்படி சொல்ல ஒரு நபிக்கு எங்கேயிருந்து தைரியம் வரும்?
ஒருவர் நபி மட்டும் இருந்தால் இப்படி இறைவனுக்கு சமமாக சொல்லமுடியுமா?
இறைவனுக்கு சமமாக இருந்தால் தான் இப்படியெல்லாம் சொல்லமுடியும்.
யோவான் 5:20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக்காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதானகிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களைஉயிர்ப்பிக்கிறார்.
பிஜே அவர்களின் கவனத்திற்கு: ஒன்றை மட்டும் நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், இயேசு நபி மட்டும் தான் என்று நிருபிக்க, நீங்கள் வேண்டுமானால் குர்ஆனை பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஏற்ற வசனங்கள் கிடைக்கலாம். ஆனால், பைபிளின் உதவியோடு அதை நிருபிக்கவேண்டுமானால், அது முடவன் எந்த உதவியும் இல்லாமல் இயமமலை உச்சியை அடையவேண்டும் என்று ஆசைப்படுவது எப்படி இயலாத ஒன்றோ அதே போலத்தான் இதுவும். நான் சொல்ல விரும்புவது இது தான், நம்பினால் பைபிளின் எல்லா வசனங்களையும் நம்பவேண்டும், நம்பவில்லையானால், எல்லா வசனங்களையும் விட்டுவிடுங்கள், ஒரு சில வசனங்களை மட்டும் பைபிளிலிருந்து எடுத்து பொருள் கூறினால், அது உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற உதவாது.
4) இறைவனை எப்படி கனப்படுத்துகிறோமோ அதே போல இயேசுவையும் கனம் செய்யவேண்டுமாம்: அதனால் தான் உலகத்தை, முஸ்லீம்களையும் சேர்த்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளார்.
அல்லாவிற்கு கொடுக்கும் மதிப்பு, கனம் முகமதுவிற்கு கொடுக்கமுடியுமா? கொடுக்கமுடியாது என்பது தானே உங்கள் பதில். ஆனால், இங்கு இயேசு சொல்கிறார், எனக்கு அப்படிப்பட்ட கனம் கொடுக்கவேண்டும் என்பதற்காக, உலகத்தை (முஸ்லீம்களையும் சேர்த்து தான்) நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளாராம். எனவே, அல்லா நியாயம் தீர்ப்பார் என்று பயப்படும் முஸ்லீம்கள், இயேசுவின் முன்பு தான், நியாயத்தீர்ப்பு நாளன்று நிற்கவேண்டும். இதை நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, வசனம் அப்படி சொல்கிறது.
யோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
5) இறைவன் தானே உயிருள்ளவராக இருப்பது போல, இயேசும் தானே உயிருள்ளவர்:
கீழே உள்ள வசனங்களில் 26ம் வசனத்தை பாருங்கள், இறைவன் எப்படி தானே உயிருள்ளவராக இருக்கிறாரோ, அதே போல இயேசும் தனக்கு தானே உயிருள்ளவராக இருக்கிறாராம்.
யோவான் 5:23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்றுமெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.25. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதேவந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன். 26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும்தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார். 27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார்.28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
இப்படி இறைவன் இருப்பதால் தான் "அனாதி தேவன்" என்றும், "ஆதியும் அந்தமும் " என்றும் கூறுவார்கள். இப்படி இயேசு அனாதியாய் இருக்கிறார் என்று சொல்கிறார்.
இதைத் தான் "ஆதியில் வார்த்தையிருந்தது" என்று யோவான் 1:1 சொல்கிறது.
இயேசு கூட "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னால் நான் இருக்கிறேன் " என்றார்.
யோவான்: 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டுகளிகூர்ந்தான் என்றார்.57. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58. அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார் .
இப்படியெல்லாம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றியும், தீர்ப்பு நாளில் தான் நியாயம் தீர்க்கப்போவதையும் சொல்லிவிட்ட பின்பு தான், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் யோவான் 5:30 வருகிறது . இப்போது அவ்வசனத்தை படித்துப்பார்த்தால் தான் சரியான பொருள் கிடைக்கும்.
பிஜே அவர்கள் எழுதியது:
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. (லூக்கா 11:20)
ஈஸா குர்ஆன் பதில்:
இயேசு பிசாசுக்களை துரத்துவதை சகிக்க முடியாத சில ஆசாரியர்கள், இவர் பிசாசின் தலைவனாலே துரத்துகிறான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் போது இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்கிறார்.
யூத ஆசாரியர்களிலும் சிலர் "தேவனின் பெயரிலே" பிசாசுக்களை துரத்துகிறார்கள், யூதர்கள் அப்படி பிசாசுக்களை துரத்தும் போது, இந்த ஆசாரியர்கள் " பிசாசின் தலைவனால் துரத்துகிறார்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆனால், இயேசு துரத்தும் போது மட்டும், இப்படி அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தான், இயேசு கீழ் கண்டவாறு கேள்வி எழுப்புகிறார், அதன் பிறகு, " தான் " எப்படி பிசாசுக்களை துரத்துகிறேன் என்று விவரிக்கிறார். இந்த பகுதியைத் தான் பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம்.
லூக்கா 11:19. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.20. நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
நீங்களும்(யூதர்களும்) பிசாசுவின் தலைவனாலே துரத்துகிறீர்களா? என்று இயேசு கேட்டபோது அவர்கள் வாய் அடைத்துபோனார்கள்.
பிஜே அவர்கள் எழுதியது:
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22,23)
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. (மத்தேயு 7:21)
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில்(சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டையவை தான் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.
இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறிஸ்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?
ஈஸா குர்ஆன் பதில்:
பிஜே அவர்களே, தெரிந்தோ தெரியாமலோ மத்தேயு 7:21-23 வசனங்களை மேற்கோள் காட்டி மிகப்பெரிய பிழையை செய்துள்ளீர்கள்.
மத்தேயு 7:21-23 வசனங்கள் நீங்கள் நம்புகிறபடியால் (அ) குறிப்பிட்ட படியால், இயேசுவைப் பற்றி கீழ் கண்ட விவரங்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள்.
1. முஸ்லீம்களையும் மற்ற உலக மக்களையும் இயேசு நியாயம் தீர்க்க நியாயாதிபதியாக உள்ளார்.
2. மக்களை இயேசு நியாயம் தீர்த்து பரலோகத்தில் அவர்களை அனுமதிக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.
நீங்கள் ஒரு வேளை, "இல்லை, இல்லை அல்லா தான் எல்லா மக்களையும் தீர்ப்பு நாளில் நியாயம் தீர்ப்பார், இயேசு அல்ல" என்று சொல்லலாம். அப்படியானால், ஏன் இந்த வசனங்களை நீங்கள் குறிப்பிட்டீர்கள். குறைந்தபட்சம் இவ்வசனங்களை முழுவதுமாக புரிந்துக்கொண்டு அவைகளை பயன்படுத்தியிருக்கலாம். இயேசுவை நியாயாதிபதியாக காட்டும் வசனங்களை குறிப்பிட்டு இருக்கக்கூடாது.
சரி, இந்த வசனங்களின் உண்மைப் பொருள் என்ன? இவைகளில் தீர்ப்பு நாளின் நீதிபதியாக இயேசு இருப்பார் என்று சொல்லியுள்ளாரா? இல்லையா? என்பதை இப்போது காணலாம்.
1. இயேசு தீர்ப்பு நாளில் நியாயம் தீர்க்கபோகிறவர், அல்லா அல்ல.
அல்லா எல்லா மக்களையும் தீர்ப்பு செய்வார் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆனால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம் "இயேசு தான் தீர்ப்பு செய்வார்" என்றுச் சொல்கிறது.
இந்த கட்டுரையின் முன் பகுதியில் நான் குறிபிட்ட வசனம் யோவான் 5:22ன் படி, எல்லா மக்களையும் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் அனைத்தும் தேவன் இயேசுவிடம் ஒப்படைத்து இருப்பதாக இயேசு சொல்கிறார். அதே விவரங்களைத் தான் இயேசு இந்த மத்தேயு 7:21,23 வசனங்களில் சொல்கிறார்.
யோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் .
2. மத்தேயு 7:22 வசனம் குறிப்பிடும் "அந்நாளில்" என்பது எதை குறிக்கும்?
மத்தேயு வசனம் 7:22ல் குறிப்பிடும் "அந்நாளில்" என்பது, உலக "நியாயத்தீர்ப்பு நாளைக் குறிக்கும் ". இதை ஏன் பிஜே அவர்கள் கவனிக்கவில்லை.
Many will say to me on that day , "Lord Lord, did we not prophesy in your name, and in your name drive out demons and perform many miralces?" (Matthew 7:22 NIV Study Bible)
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)
பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 7:22-23 வசனங்களில் சொல்லப்பட்ட உரையாடல் இயேசு வாழ்ந்த காலத்தில் நடக்கும் என்று இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக இந்த உரையாடல் எதிர்காலத்தில் அதுவும் இயேசு ஒரு நியாயாதிபதியாக மக்களுக்கு தீர்ப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் போது நடக்கும் உரையாடல் இது என்று இயேசு சொல்கிறார்.
இயேசு எப்போதும் பாவிகளோடு உணவு சாப்பிடுகிறார் என்று ஆசாரியர்கள் குற்றம்பிடித்தார்கள், இயேசுவும், நான் பாவிகளுக்காகவே வந்தேன் என்றுச் சொல்லி, எல்லாரையும் மன்னித்தார், ஆனால், இந்த வசனத்தில் மட்டும் ஏன் அவர் துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்களை தள்ளிவிடுகிறார்? இதற்கு காரணம், அவரது முதல் வருகை உலகை நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, ஆனால், அவர் இரண்டாம் முறை வரும் போது, நீயாயம் தீர்க்க நீதிபதியாக வருவார், அதனால் தான், என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்.
3.இயேசுவின் பெயரை பயன்படுத்தி "தீர்க்கதரிசனம், அற்புதங்கள் நடக்கும்" :
தீர்க்கதரிசனம் என்பது, இறைவன் மக்களுக்கு சொல்லும்படி தன் பிரதிநிதிக்கு அறிவிக்கும் செய்தி. அதை மக்களுக்கு அவர் அறிவிப்பார். அவரை நாம் தீர்க்கதரிசி என்றுச் சொல்கிறோம்.
இப்போது பிஜே அவர்களுக்காக ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்:
எந்த ஒரு "நபிவுடைய" பெயரை பயன்படுத்தி "யாராவது தீர்க்கதரிசனம்" சொல்லமுடியுமா?
அதாவது, "அல்லா உரைப்பது என்னவென்றால்..." என்று முகமது தீர்க்கதரிசனம் சொன்னார் என்று நம்புகிறீர்கள் அல்லவா? அது போல, ஒரு நபியுடைய பெயரை பயன்படுத்தி, யாராவது தீர்க்கதரிசனம் உரைக்கமுடியுமா?
உதாரணத்திற்கு: "கர்த்தர் உரைப்பதாவது என்னவென்றால்" என்று பைபிளிலும், "அல்லா உரைப்பது என்னவென்றால்" என்று குர்ஆனிலும் வருவது போல, " மோசே உரைப்பது என்னவென்றால் ", என்று சொல்லி யாராவது தீர்க்கதரிசனம் உரைக்க முடியுமா? ஆனால், இயேசுவின் பெயரை பயன்படுத்தி தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்று மக்கள் அவ்வசனத்தில் சொல்கின்றனர். இதே போலத்தான் யோவானும் தனக்கு இயேசுவின் மூலமாக வெளியாக்கப்பட்ட தீர்க்கதரிசன வசனங்களை பதிவுசெய்துள்ளார்.
நீங்கள் குறிப்பிட்ட வசனம் மத்தேயு 7:21-23 சொல்கிறது, அனேகர், இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார்களாம், அற்புதங்கள் செய்தார்களாம். இயேசு ஒரு நபி மட்டும் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இது எப்படி சாத்தியமாகும்?
இயேசுவின் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள் செய்யப்பட்டதா? என்று தெரிந்துக்கொள்ள, பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:
இயேசுவின் பெயர் படுத்தி அற்புதம்: இயேசுவின் நாமத்தினாலே எழுந்து நட என்று யோவானும், பேதுருவும் ஒரு முடவனுக்குச் சொல்லி அற்புதத்தை செய்தார்கள், அப்போஸ்தலர் நடபடிகள் 3:1-8 வசனங்கள் .
அப் 3:1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களித்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தோலயத்திற்குள் பிரவேசித்தான்.
இயேசுவின் மூலம் தீர்க்கதரிசனம்: யோவானுக்கு இயேசு தரிசனம் கொடுத்து கடைசி காலங்களில் நடக்கும் விவரங்களை தீர்க்கதரிசனமாக சொன்னார், அது இப்போது புதிய ஏற்பாட்டில் உள்ள கடைசி புத்தகமாகிய " வெளிப்படுத்தின விசேஷம் " என்ற புத்தகம்.
இயேசுவின் பெயர் மூலம் பிசாசுக்களை துரத்துதல்:
இயேசு தன் பெயர் மூலமாக பிசாசுகளை துரத்த தன் சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், அவர்கள் சென்று அப்படியே செய்து மறுபடியும் வந்து ஆமாம், அசுத்த ஆவிகள் கூட எங்களுக்கு கீழ்படிகிறது என்று சொன்னார்கள்.
மத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
லூக்கா 10:17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவநது, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18. அவர்களை அவர் நோக்கி, சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
இந்த அற்புதங்கள் இயேசுவின் பெயரினாலே செய்யப்பட்டவைகள், இது போல பல அற்புதங்களை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.
நான் ஏன் இந்த விவரங்கள் இங்கு குறிப்பிட்டேன் என்றால், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் பலர் இப்படி இயேசுவிடம் தங்கள் மூலம் நடைபெற்ற அற்புதங்களை முன்வைத்து பரலோகத்தின் உள்ளே செல்லலாம் என்று நினைத்து அனுமதி கேட்கிறார்கள். இயேசு ஏன் அவர்களை பரலோகத்தில் அனுமதிக்கவில்லை என்பதை கீழே விளக்குகிறேன். இங்கு முக்கியமாக சொல்லவந்த செய்தி, "இயேசுவின் பெயரில் அற்புதங்கள், தீர்க்கதரிசனம், பிசாசுக்களை துரத்தப்படுதல்" நடந்துள்ளது என்பதே . இந்த வசனத்தை பிஜே அவர்கள் இதை தெரிந்துக்கொள்ளாமல் குறிப்பிட்டது, தான் இன்னும் ஆச்சரியம்.
இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பதை பிஜே அவர்கள் அங்கீகரிக்கிறாரா?
இயேசுவின் பெயரில் அற்புதங்கள் நடைபெற முடியும் என்பதை பிஜே அவர்கள் ஒப்புக்கொள்கிறாரா?
இயேசுவின் பெயரில் பிசாசுக்களை துரத்தமுடியும் என்பதை பிஜே அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?
"இல்லை, நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்வாரானால், பின் ஏன் இந்த வசனத்தை மேற்கோள் காட்டினீர்கள்?" என்பது தான் என் கேள்வி.
4. இயேசுவின் பெயர் மூலம் அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள் சொன்னவர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை?
இப்போது ஒரு நியாயமான கேள்வி எழும்பும், அதாவது "இயேசு " என்ற பெயர் மூலமாக பல அற்புதங்கள் செய்தவர்களை, தீர்க்கதரிசனம் சொன்னவர்களை, பிசாசுக்களை துரத்தியர்வர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை. அவர்களை "அறியேன்" என்று ஏன் சொன்னார்?
இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது இயேசுவை உண்மையாய் பின்பற்றுகின்ற ஒரு நபரின் ஜெபத்தை கேட்டு, இயேசு பல அற்புதங்களை செய்கிறார். மக்களை சுகமாக்க, அவர்களில் உள்ள அசுத்த ஆவிகளை துரத்த இயேசு தன் ஊழியர்களை(போதகர்களை, சுவிசேஷகர்களை...) பயன்படுத்திக்கொள்கிறார். இன்று கூட தன் ஊழியர்கள் மூலம் இயேசு அற்புதங்கள் செய்துக்கொண்டு வருகிறார்.
இன்று நாம் சில ஊழியர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கலாம். ஒரு காலத்தில் நல்ல ஊழியர்களாக இருந்தவர்கள், இயேசுவிற்காக அதிகமாக கடினமாக உழைத்தவர்கள், திடீரென்று பண ஆசை பிடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி, பிடிபட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர், சில பெண்கள் விவகாரங்களில் மாட்டிக்கொண்டு, சிறைச்சாலை செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் உண்மையாய் இருந்தவர்கள், ஆனால், சிலர் உலகம் தான் முக்கியம் என்று ஆசை வைத்து குற்றம் செய்து இயேசுவின் வழியை விட்டு விலகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் "அக்கிரம செய்கைக்காரர்களே, என்னைவிட்டு போய் விடுங்கள்" என்று இயேசு சொல்கிறார்.
இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து கூட , இயேசுவிடமிருந்து அதிகாரத்தை பெற்றவன் தான், பிசாசுக்களை துரத்தியவன் தான், ஆனால், எப்போது தவறு செய்தானோ, அந்த நேரத்திலிருந்து அவன் தன் இரட்சிப்பை இழந்துவிட்டான்.
எனவே, ஒரு மனிதன் கிறிஸ்தவத்தில் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல, தன் கடைசி மூச்சு வரையில் இயேசுவின் கட்டளைப் படி பரிசுத்தமாக வாழவேண்டும். முதல் பல ஆண்டுகள் பரிசுத்தமாக வாழ்ந்து பிறகு துன்மார்க்கமான வாழ்வு வாழ்ந்தால், அவனுக்கு இயேசு சொல்லும் வார்த்தைகள் " நான் உன்னை அறியவில்லை " என்பது தான்.
நாம் இயேசுவின் வார்த்தகள் கேட்கிறவர்களாக மட்டுமல்ல, அதன் படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று இயேசு நீங்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்தில் சொல்கிறார்.
இயேசுவின் கட்டளைகளை பின்பற்றுகிறவர்களை கல்லின் மீது வீடுகட்டுகிறவனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். அப்படி அவரது கட்டளைகளை பின்பற்றாதவர்கள் மணலின் மீது வீடு கட்டுகிறவர்களுக்கு ஒப்பிடுகிறார். இந்த மணலின் மீது வீடு கட்டுகிறவர்கள் போலத்தான், அந்நாளில் வந்து நாங்கள் அற்புதங்கள் செய்தோம் என்று காரணங்கள் காட்டி இயேசுவிடம் அனுமதி கேட்கிறார்கள்.
மத்தேயு 7:24-27 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது . நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
எனவே, நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் (மத்தேயு 7:22 முதல் 23 வரை ) இயேசு தன் இரண்டாம் வருகையில் நடக்கும் நியாயத்தீர்ப்புப் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நீதிபதியாக வருவார் என்று தன்னை அறிமுகம் செய்கிறார், எல்லாரும் தன்னிடமே கடைசியில் நியாயத்தீர்ப்புக்காக நிற்கவேண்டும் என்றுச் சொல்கிறார். நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதாது அதன் படி செய்பவர்களை மட்டுமே நான் சொர்க்கத்தில் அனுமதிப்பேன் என்று இயேசு சொல்கிறார். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கை எவ்வளவு கடுமையான புயல் வந்தாலும், மழை பெய்தாலும் அசைக்கமுடியாதது என்று அப்படிப்பட்டவர்களை இயேசு உட்சாகப்படுத்துகிறார்.
பிஜே அவர்கள் எழுதியது:
அங்கே அவர் சில நோயாளிகளின்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலேசுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். (மாற்கு: 6:5,6)
இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறோன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.
அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள்.
ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.
அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு: 12:38,39)
மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.
ஈஸா குர்ஆன் பதில்:
இந்த பகுதிக்கு நான் "இயேசு ஏன் சில நேரங்களில் அற்புதங்கள் செய்யவில்லை – பாகம் 1 " என்ற கட்டுரையில் பதில் அளித்துள்ளேன். இக்கட்டுரையை இந்த தொடுப்பில் படிக்கலாம் : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-1.htm .
பிஜே அவர்கள் எழுதியது:
மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.
ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். (மத்தேயு 9:8)
அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஈஸா குர்ஆன் பதில்:
பிஜே அவர்களே, ஏதோ ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு அல்லது சில மனிதர்கள் சொன்னதை ஆதாரமாக் காட்டி, மற்ற இடங்களில் மக்கள் இயேசுவைப் பற்றி என்ன என்று சொல்கிறார்கள் என்பதை குறிப்பிடாமல், நீங்கள் எழுதுகிறீர்கள்.
இயேசு வாழ்ந்த அதே காலத்து மக்கள் அவரைப் பற்றி வேறு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கீழே தருகிறேன். இந்த வசனங்கள் எல்லாம் பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஏன் இவ்வசனங்களை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்?
1. காபிரியேல் தூதன் கூட, இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னார் (லூக்கா 1:32,35)இந்த வசனங்கள் "இயேசு தேவகுமாரன் " என்று சொன்ன "வார்த்தைகள் " வரும் வசனங்கள் தான். இன்னும் பல விதங்களில் பலர் இயேசுவைப்பற்றி சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. (தாவீதின் குமாரனே, கிறிஸ்து, etc.. என்றும் சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் குறிப்பிடவில்லை).
2. யோவான் ஸ்நானகன் கூட "இயேசு தேவகுமாரன்" என்றுச் சொல்லியுள்ளார் (யோவான் 1:34)
3. யூத மூப்பர்கள், ஆசாரியர்கள் இயேசுவிடம் "நீ தேவகுமாரனா?" என்று கேட்டபோது, "இயேசு ஆம், நான் அவர் தான் என்றார்" (லூக்கா 22:70)
4. நாத்தன்வேல் என்ற யூதனும் "இயேசுவை தேவகுமாரன்" என்றுச் சொல்கிறார் (யோவான் 1:49)
5. இயேசுவை சிலுவையில் அறைந்த ஒரு இராணுவ சேவகர்களின் தலைவனும் , இயேசுவை "தேவகுமாரன்" என்றுச் சொன்னான் (மத்தேயு 27:54, மாற்கு 15:39)
6. பேதுரு இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:16)
7. ஒரு முறை படகில் இருந்த சீடர்கள் , கடல் கொந்தலிப்பதை இயேசு அமர்த்தியதால், இயேசு தேவ குமாரன் என்று அறிக்கையிட்டார்கள், பணிந்துக்கொண்டார்கள். (மத்தேயு 14:33)
8. அசுத்த ஆவிகள் மனிதர்களை விட்டு போகும் போது, அவைகளும் இயேசு தேவகுமாரன் என்று அறிக்கையிட்டு வெளியேறியது (மத்தேயு 8:29, மாற்கு 3:11)
9. சாத்தான் இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொல்கிறான் , தேவகுமாரனாகிய மேசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்களும் அவனுக்கு தெரிந்திருக்கிறது (மத்தேயு 4:3, 4:6)
பிஜே அவர்களே, நீங்கள் மக்கள் ஒரு முறை சொன்ன வசனத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள். எத்த்னைப் பேர் "இயேசு தேவகுமாரன் என்று" சொல்லியுள்ளார்கள் பார்த்தீர்களா?
காபிரியேல் தேவதூதன், யோவான் ஸ்நானகன், யூத ஆசாரியன் நாத்தன்வேல், இயேசுவின் சீடர்கள், சாத்தான் என்ற இப்லீஷ், அசுத்த ஆவிகள், என்று எல்லாரும் சொல்லியுள்ளார்கள். அவ்வளவு ஏன், இயேசுவை மூப்பர்கள், ஆசாரியர்கள் கேட்டபோது மௌனமாக இல்லாமல், தான் "ஒரு தேவகுமாரன்" என்று இயேசுவே சொல்லியுள்ளார்.
அதாவது, காபிரியேல் தூதன் மூலம் அல்லா குர்ஆனை சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினார் என்று நம்புகின்ற நீங்கள், அதே காபிரியேல் தூதன் முதல், இப்லீஸ் என்ற சாத்தான் வரை, இயேசுவை "தேவகுமாரன்" என்று அறிக்கையிட்டுள்ளார்கள், இதற்கு உங்கள் பதில் என்ன? மனிதர்கள் சிலர் சில நேரங்களில் சொன்ன வார்த்தைகளை நம்பும் நீங்கள், தேவ தூதன் சொல்வதை நம்பமாட்டீர்களா? தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகன் சொல்வதை நம்பமாட்டீர்களா? அப்படியானால், இதே காபிரியேல் மூலம் உங்கள் குர்ஆன் இறக்கப்பட்டது என்று "கிறிஸ்தவர்கள்" எப்படி நம்புவது?
எனவே, இயேவை தேவகுமாரன் இல்லை என்று நிருபிக்க பைபிளை பயன்படுத்துகிறவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் எல்லாருக்கும் சொல்லிக்கொள்ளுகிறேன்.
கர்த்தருக்கு சித்தமானால், பிஜே அவர்களது புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் உள்ள மற்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் போது சந்திக்கலாம்.
http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-2.htm