அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை - An Answering-Islam.org/Tamil Article
அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை
(Outline of the Basic Christian Beliefs)
கிறிஸ்தவம்
இன்று கிறிஸ்தவம் என்ற வார்த்தை பல்வேறு மாறுபட்ட கருத்துக்களில் சிந்திக்கப்படுகிறது. இது நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் வேறுபட்ட பல வண்ணமான எண்ணங்களையும் சிந்தனைகளையும் உருவாக்குகிறது. சிலருக்கு இது சிலுவைப்போர் (Crusades, the Spanish Inquisition) அல்லது சலிம் விட்ச் ட்ரையல் (Salem Witch trials) என்ற "மந்திரவாதிகளின் மிது வழக்கு" போன்ற சரித்திர நிகழ்வுகளை நினைவு படுத்துகின்றது. சிலருக்கு தேவாலயம், ஆராதனை மற்றும் பரலோகம் செல்லுதல் போன்ற காரியங்களை நினைவு படுத்துகின்றது. மேலும் சிலருக்கு தாங்கள் தொலைக் காட்சியில் காணும் தேவ ஊழியர்களைப் பற்றிய பரபரப்பான அவதூறு செய்திகள் நினைவுக்கு வரலாம். எவ்வாறாயினும், கிறிஸ்த்துவம் பற்றிய நமது கருத்து, நமது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவாகும். பலருக்கு இந்த அனுபவம் என்பது டிவி, பத்திரிக்கை போன்றவற்றின் மூலமாகவோ, ஆலயத்திற்குப் போவதினாலோ அல்லது தங்களை "கிறிஸ்தவர்கள்" எனக் கூறிக் கொள்ளும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிப் பழகியதின் வழியாகவோ கிடைக்கும். எப்படியானலும், கிறிஸ்த்துவம் பற்றிய அறிவினை பெரும்பாலோனோர் பைபிளைப் படிப்பதன் மூலம் பெற்றுக் கொள்வதில்லை. பைபிள் சொல்வது என்ன எனப் புரிந்துகொள்ளும் அறிவு ஒன்றே கிறிஸ்தவம் பற்றிய பரந்த முழுமையான தகவலுக்கு மிகவும் முக்கியமானது. பைபிள் மூலமாகவேயன்றி வேரொன்றின் மூலமாகவும் இதனை புரிந்துகொள்ள முடியாது என்பதினை கருத்தில் கொண்டு பல்வேறு தலைப்புகளைப் பற்றி எழுதவும் விவரிக்கவும் முனைந்தேன்.
பைபிளை படித்து புரிந்துகொள்வதின் மூலமாக கிறிஸ்துவத்தை அறிந்து கொள்ளும் ஒருவர் பைபிள் உண்மையா அல்லவா என்பதினை கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. உண்மையில் ஒரு மதத்தைப் பற்றி நாம் புரிந்துக்கொள்ள விரும்பினால், ஒரு முக்கியமான விவரத்தை நாம் உணரவேண்டும், அது என்னவென்றால், அம்மதத்தை பின்பற்றுகிறவர்கள் தங்கள் புனித நூல்கள் உண்மையானவைகள் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதை நாம் அறியவேண்டும். எனவே நாம் விவாதிக்கும் கீழ்கண்ட காரியங்கள் நாம் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே தவிர எதனையும் நம்ப நம்மை கட்டாயப்படுத்த அல்ல. அதாவது பைபிள் கூறுவது என்ன என்பதை விவாதிப்பது மட்டுமேயன்றி அதனை நம்புமாறு வலியுறுத்துதல் நம் நோக்கமன்று.
பைபிளின் அடிப்படை செய்தி
"கடவுள் என்பவர், கண் காணாத தொலைவில் தனியாக ஒரு சிம்மாசனத்தின் மீது வசதியாக அமர்ந்து கொண்டு மனிதர்களைப் பற்றி நினைவு ஏதுமின்றி அவர்கள் அவரை அனுகி தஙகள் பிரச்சனைகளை கவனிக்குமாறு வலியுறுத்தும்போது மட்டுமே நடவடிக்கை எடுக்கும் ஒரு நபராக கடவுள் இருக்கிறார் என்று சிலர் மனதில் உருவாக்கிக் கொண்டுள்ளனர்." (1)
பைபிள் காட்டும் கடவுள் நிச்சயமாக இப்படி இருக்கமாட்டார். இப்பகுதியில் பைபிள் கூறும் அடிப்படை செய்திகளை நாம் பார்ப்போம். இந்த அடிப்படை செய்தியில் கடவுளும் ஒரு பகுதியே. பைபிளில் காணப்படும் மற்றொரு முக்கியமான பகுதி மனிதனைப் பற்றியது, எனவே, மனிதனைப் பற்றி பைபிள் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறது. மனிதன் என நாம் கூறுவது ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய மனித குலத்தையே என்பதை கருத்திற் கொள்ளவும். பைபிள், "கடவுள் மற்றும் மனிதன்" பற்றிய விவரங்களை சொல்வதோடு மட்டுமில்லாமல் "அவர்களுக்குள் உள்ள உறவுகள்" பற்றியும் சொல்கிறது. தற்போது நாம் இந்த உறவு பற்றி பைபிள் கூறுவதை சிந்திப்போம்.
ஆரம்பத்தில் . . .
ஆரம்பத்தில் பரிபூரணமான தேவன், அனைத்தையும் படைத்துள்ளதை பற்றி பைபிள் விளக்குகிறது. அவர் மனிதனை அவர் சாயலாகப் படைத்தார் (ஆதியாகமம்1:27). மனிதன் தேவனைப் போன்றே எந்த ஒரு குறைபாடுமின்றி இருந்தான். இவ்வாறு மனிதனும் தேவனும் சீரான குறையில்லாத நல்லுறவில் மகிழ்ந்தனர்.
அனைவரும் பின் வாங்கிப்போனார்கள்
மனிதன் தேவனின் சாயலாக இருந்தபடியால்யிருந்தபடியினால் தனக்கு வேண்டியதை தன்னிச்சையாக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை பெற்றிருந்தான். இவ்வாறு தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தினால் தேவனின் வழிகளை விட்டு தான் தெரிந்து கொண்ட சொந்த வழியினில் மனிதன் சென்றான். ஒவ்வொருவரும் அவ்வாறு செய்தார்கள் என்று பைபிள் கூறுகிறது. "நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்" (ஏசாயா 53 : 6). இது பைபிளில் உள்ள கெட்ட குமாரனின் உவமையில் வருவது போன்று (லூக்கா 15 : 11-32) ஒரு குழந்தை வீட்டை விட்டு ஓடிப் போவதைப் போன்று உள்ளது. அதற்கு தன்னிச்சையாக உயிர் வாழும் சக்தி இல்லாவிடினும், ஒரு மூன்று வயது குழந்தை தன் பெற்றோரிடம் "வீட்டை விட்டுப்போய் இவ்வாறே தானே தனியாக வாழ்ந்து கொள்வேன்" எனக் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது போன்றே மனிதனும் தேவனின் துணையின்றி ஏதும் செய்ய இயலாவிடினும் தானே தன்னிச்சையாக வாழ முற்படுகிறான்.
பாவம்
தேவனின் வழிகளை விட்டு விலகி தன் வழியை தானே தெரிந்து கொள்ளுதலைத்தான் பைபிள் "பாவம்" என்று குறிப்பிடுகிறது. இதுதான் தேவனிடமிருந்து மனிதனைப் பிரிக்கிறது. ஏசாயா 59 : 2 கூறுகிறது,"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது". "பாவத்தின் சம்பளம் மரணம்" என ரோமர் 6:23 சொல்கிறது. மனிதன் தன் பாவத்தின் காரணமாக தேவனை விட்டு ஆவிக்குரிய விதத்தில் பிரிந்துவிட்டான்(Man spiritually separated from God).
திராட்சை செடியிலிருந்து துண்டிக்கப்பட்ட கொடியைப் போல (யோவான் 15:5), மனிதன் உயிரோடு இருப்பதாகக் காணப்பட்டாலும் தேவனின் வழிகளை விட்டு விலகி இருக்கும் போது ஜீவனைக் கொடுக்கும் ஊற்று அவனில் இல்லாததினால் அவன் செத்தவனாகவே காணப்படுகிறான்.
தேவனிடம் திரும்ப மனிதன் என்ன செய்யக்கூடும்?
பரிபூரணமான தேவனிடம் இருந்த முழுமையான உறவை மனிதன் துண்டித்ததால், தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு ஆத்துமார்த்தமாக செத்தவனானான் (spiritually dead). இந்த அவல நிலையிலிருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி? தேவனிடமிருந்து விலகியதால் முறிந்த உறவினை பலர், தங்களை மத சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வதினாலும், தூய வாழ்வு வாழ்வதினாலும், தான தருமங்கள் செய்வதினாலும் சீர்படுத்தி விட நினைக்கிறார்கள். ஆனால் மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாது என பைபிள் கூறுகிறது (மத்தேயு 19 : 25,26). முறிந்த இவ்வுறவை சீர் செய்ய மனிதன் எந்த நற்செயலைச் செய்தாலும் அது பயன்படாது, அது வீண் தான் (காண்க : எபேசியர் 2:8,9 & தீத்து : 3:5). இதற்கு எந்த தீர்வையும் காணாமல், இப்படியே விட்டுவிட்டால், மனிதன் நிரந்தரமாகவே தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போவான்.
தேவன் செய்வது என்ன?
மனிதனோடு தனக்குள்ள பூரணமான உறவை புதுப்பிக்கவே தேவன் விரும்புகிறார். 1 தீமோத்தேயு 2 : 4 இன் படி தேவன் எல்லா மனிதரையும் இரட்சிக்கவே விரும்புகிறார். எசேக்கியேல் 33 : 11 ல் தன்னைவிட்டு விலகிச் செல்பவர்களின் மரணத்தை அவர் விரும்புவதில்லை எனச் சொல்கிறார். எனவே அவர் செய்வது என்ன?
தேவனுடனுள்ள ஒரு பரிபூரணமான உறவுடன் மனிதன் இருக்க வேண்டுமானால், மனிதன் முதலில் பூரண சற்குணவானாக மாற்றப்படுதல் வேண்டும் (மத்தேயு : 5 : 48) (In order to enjoy a perfect relationship with God, man must first be made perfect, because God is perfect) . ஆனால் மனிதன் ஏற்கனவே தேவனிடமிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்ததினால் பரிபூரணத் தன்மையை இழந்து கறைபட்டு இருந்தான். புதிய உறவினை உருவாக்க தேவன் அவன் பாவத்தை நீக்கியாக வேண்டியிருந்தது.
எனவே தேவன் மனிதனாக வந்தார் என பைபிள் கூறுகிறது (யோவான் 1 : 14). அவர் பல வழிகளில் மனிதனைப் போன்று தூண்டப்பட்டும் பாவமற்ற ஓர் வாழ்க்கை வாழ்ந்தார் (எபிரேயர் 4 : 15). அவரின் பெயர் தான் இயேசு. மனிதனாக இருந்தும் பாவம் செய்யாமல் இருந்த ஒரே மனிதர் இயேசு ஒருவர் மட்டுமே மற்றும் தேவனோடு தன் உறவை முறித்துக் கொள்ளாதவராக இருந்தார், அவர் தாமே தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
"நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக் கொண்டேன் என்றார்." (யோவான் 10:17-18).
அவர் தாமே தம்மை சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுத்து தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவு மறுபடியும் சீராக்கப்பட இந்த உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் தம்மீது சுமரப்பண்ணினார்.
"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." (2 கொரிந்தியர் 5:21)
"ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்." (1 பேதுரு 3:18)
ஆக, தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக்கப்பட அவர் மனிதனுக்கு ஒரு வழியை உண்டக்கினார். மனிதர் செலுத்த வேண்டாதபடிக்கு பாவத்திற்கான அபராதத்தினை தாமே செலுத்தி மரணத்தையும் தேவனிடமிருந்து ஏற்பட்ட பிரிவினையையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
தேவன் வழங்கும் பரிசை பெற்றுக்கொள்ளுதல்
அப்படியானால் இயேசுவின் இச்செயலினால் அனைத்து மனிதர்களும் தேவனின் பக்கம் திரும்பி விட்டார்கள் என பைபிள் கூறுகிறதா? என்று கேட்டால், பதில் "இல்லை" என்பதாகும். ரோமர் 6:26 கூறுகிறது, "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" என்று. இது எவ்வாறு இருக்கிறது என்றால், ஒரு மனிதன் தெருவோரம் நின்றுகொண்டு வரும் அனைவருக்கும் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுக்கிறான் என்று வைத்துக் கொள்ளுவோம்; நாம் நூறு ரூபாய்க்கு உரிமையாளராக வேண்டுமென்றால் அந்த மனிதனிடம் போய் அவர் கொடுக்கும் அந்த நோட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?. எனவே பரிசு என்றாலும் அதனை பெற்றுக் கொள்வது என்பது ஒன்று உண்டு. இதைப் போன்றதே நித்திய வாழ்வு (அதாவது தேவனுடன் நித்திய காலமாக வாழ்வது) என்பதினை பைபிள் எடுத்துச் சொல்கிறது. கீழ்கண்ட வசனம் இதை விளக்குகிறது.
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்." (யோவான் 1:12-13)
"... கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப் படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்." (ரோமர் 10:9-10)
எனவே இயேசு கிறிஸ்துவை நம்புதல் என்பதே தேவன் அளிக்கும் பரிசினை பெற்றுக்கொள்ளும் முறை. இங்கு நம்புவது என்பது அறிவுபூர்வமாக விசுவாசிப்பதை விட ஒரு படி அதிகமாகும். "இருதயத்தில் விசுவாசித்தல்" என பைபிள் கூறுவது நாம் வாழும் முறையினையே மாற்றி அமைக்கவல்ல ஓர் ஆழமான நம்பிக்கை ஆகும். அதாவது இயேசு நமக்குச் செய்வேன் என வாக்களித்ததை நமக்கு செய்வார் என்பதை முற்றிலுமாக விசுவாசித்தலே ஆகும். இயேசு சொல்கிறார் :
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." (வெளிப்படுத்துதல் 3:20)
ஆகவே எல்லா மனிதரும் செய்ய வேண்டியது இயேசு கிறிஸ்துவினிடத்தில் வேண்டிக்கொள்வது அல்லது கேட்பது மட்டுமே; அப்போது இயேசு அவர்களின் வாழ்வில் பிரவேசிப்பார்.
மொத்தத்தில் பைபிள் வழங்கும் செய்தி இதுவே :
முதலாவது
தேவன் மனிதனை தமது சாயலாகப் படைத்து அவனுடன் ஓர் பரிபூரண உறவுவினை வைத்திருந்தார்.
"நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்று இயேசு சொன்னார் (யோவான் 10:10b)
"... இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்." (ரோமர் 5:1)
இரண்டாவது
மனிதன் தேவனின் வழியை விட்டு விலகி தனது சொந்த வழியை தெரிந்து கொண்டான். இவ்விதமான வழி விலகுதலினால் (பாவம்) அவன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போனான். அதாவது ஆத்துமார்த்தமாக அவன் செத்தான்.
"... உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." (ஏசாயா 59:2)
மூன்றாவது
தேவனின் பரிகாரம் - சிலுவை
இந்த பிரச்சனைக்குத் தீர்வு இயேசு கிறிஸ்து மட்டுமே. அவர் சிலுவையில் மரித்து கல்லறையிலிருந்து உயிர்தெழுந்து நம் பாவங்களுக்கான பரிகாரமானதினால் நமக்கும் தேவனுக்குமான இடைவெளியினை இணைத்தார். இதன் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் ஆதியிலே இருந்த பரிபூரண உறவை புதுப்பித்தார்.
"கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்." (1 பேதுரு 3:18)
"தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே." (I தீமத்தேயு 2:5)
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்." (ரோமர் 5:8)
நான்காவது
நம் பங்கு
தேவனுடன் வாழும் நித்திய வாழ்வுக்காக மனிதன் இப்பரிசை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டுவதெல்லாம் பைபிளில் வாக்களிக்கப்பட்டவைகளை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவரை வேண்டிக்கொள்வதே.
"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 5:24)
நாம் ஏன் தேவனின் பக்கமாக கடந்துச்சென்று நித்திய வாழ்வினை சுதந்தரித்துக் கொள்ளக் கூடாது? நீங்கள் அப்படி போகவில்லையானால், இதற்கு ஏதாவது காரணமுண்டா உங்களிடம்?
கிறிஸ்துவை பெற்றுக்கொள்வது எப்படி?
- தேவையை ஒப்புக்கொள்ளுங்கள் (நான் ஒரு பாவி).
- பாவங்களினின்று விலக ஒப்புக்கொடுங்கள் (மனம் திரும்புதல்).
- இயேசு கிறிஸ்து உங்களுக்காக சிலுவையில் மரித்து, பின் உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசியுங்கள்.
- ஜெபத்தின் மூலம் இயேசுவை உங்களுள் வரவழைத்து உங்கள் வாழ்க்கை பரிசுத்த ஆவியின் மூலம் வழிநடத்தப்பட ஒப்புக்கொடுங்கள் (அவரையே ஆண்டவராகவும் வாழ்வின் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்)
என்னவென்று ஜெபிப்பது?
நான் பாவி என்பதை அறிவேன்; உமது மன்னிப்பு எனக்கு வேண்டும். எனது பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அந்தப் பாவங்களினின்று வெளியேவர நான் விரும்புகிறேன். இப்போது உம்மை என் உள்ளத்திலும் என் வாழ்விலும் வரவேற்கிறேன். உம்மை எனது ஆண்டவராகவும் எனது இரட்சகராகவும் நம்பி என் வாழ்வில் உம்மை பின்பற்ற வாஞ்சிக்கிறேன்.
உமது ஒப்பற்ற நாமத்தினாலே, ஆமென்.
நித்திய வாழ்வுக்கான தேவனின் வாக்குறுதி
நீங்கள் இவ்வாறு ஜெபித்து இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பீர்களானால் நித்திய வாழ்வு உங்களுக்கு நிச்சயம் என பைபிள் உறுதியளிக்கிறது.
"... ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." (ரோமர் 10:13)
"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல." (எபேசியர் 2:8-9)
இயேசுவை நாம் ஏற்றுக்கொண்டால், விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதரினுள்ளும் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயலினால் நாம் மறுபடியும் தேவனின் குடும்பத்தில் பிறக்கிறோம். இதுவே மறுவாழ்வு அல்லது "புதிய பிறப்பு" என்பதாகும்.
____________________
மூலம்: தமிழ் - அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை | ஆங்கிலம்: Outline of the Basic Christian Beliefs
Isa Koran Home Page | Back - Christianity Index |