முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
ஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்
ஜைனப் பின்ட் ஜாஷ்ஷை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜைனப் இபின் ஹரிதா தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறார்.
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். குர்ஆன் 33:37
இஸ்லாமிய பாரம்பரிய ஹதீஸ்கள் இன்னும் மேலதிக விவரங்களைத் தருகிறது:
சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7420
அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.
சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7421
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக ('வலீமா' விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: 'அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்துவைத்தான்' என்று சொல்வார்கள்
சஹீ முஸ்லீம்: அனஸ் (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அறிவித்ததாவது:
ஜைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ஜையத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவை பிசைந்துக்கொண்டு இருக்கும் போது ஜையத் அங்கு சென்றார். அவர் கூறினார்: நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன். அதனால், நான் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல், வேறு திசையில் திரும்பிக்கொண்டு பேசினேன். நான் கூறினேன் "ஜைனப், அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்". இதற்கு பதிலாக அவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்துக்கொள்ளும் வரை நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறினார்கள். இதை சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போது தான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்.... (சஹீ முஸ்லீம், பாகம் 008, எண் 3330) (இந்த ஒரு ஹதீஸ் நம்முடைய தமிழாக்கம், ஆங்கிலத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்)
முஹம்மதுவின் மற்ற மனைவிமார்களில் யாரும் வஹி மூலமாக அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடி வெளிப்பாட்டின் படி அவருக்கு திருமணம் செய்யப்படவில்லை என்று ஜைனப்பின் பெருமை பாராட்டல் காட்டுகிறது. நேரடி வெளிப்பாட்டின் படி ஜைனப் மட்டும் தான் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள்.
இருந்தபோதிலும், காபிரியேல் தூதன் முஹம்மதுவிற்கு கனவில் ஆயிஷாவை காட்டியதாக முஹம்மது சொல்லியுள்ளார்.
சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.
சஹீ புகாரி: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5125
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன்
மேலே கண்ட ஹதீஸ்களின் படி, ஆயிஷா முஹம்மதுவின் மனைவி என்று அல்லாஹ் முதலாவதாக அறிவித்ததாக சொல்லப்படுகிறது, இந்த முறை இவ்வெளிப்பாடு கனவு மூலமாக வந்தது. இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் போன்றவர்களோடு இறைவன் கனவின் மூலமாக தரிசனங்களின் மூலமாக பேசுவார் என்று குர்ஆன் சொல்கிறது:
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். குர்ஆன் 8:43
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." குர்ஆன் 37:102
வெளிப்பாடுகள் வெளிப்படும் விதங்களில் கனவு கூட ஒரு வகை என்பதை ஹதீஸ்கள் அங்கீகரிக்கின்றன.
சஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 1, எண் 3
ஆயிஷா(ரலி) கூறினார்.
"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். ......,
சஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 4, எண் 138
நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.
சஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6983
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், ஆயிஷாவை மணந்துக்கொள்ளும்படி முஹம்மதுவிற்கு வெளிப்பாடு கனவு மூலமாக கிடைத்துள்ளது.
மேற்கண்ட விவரங்கள் சில முரண்பாடுகள், பிரச்சனைகளை உருவாக்குகிறது.
1) முஹம்மதுவின் மனைவிமார்களில் எல்லாம் தன்னை மட்டுமே அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்பாடு மூலகாக திருமணம் செய்தார் என்று ஜைனப் சொன்னது தவறானதா? ஆயிஷாவை கூட முஹம்மது திருமணம் செய்யும் படி அல்லாஹ் கனவு மூலமாக தெரிவித்துள்ளார் என்பதை ஹதீஸ்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறதே.
அல்லது
2) தான் ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா?
அல்லது
3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளவேண்டி, அதை நியாயப்படுத்த குர்ஆனிலேயே ஒரு வசனத்தை சொந்தமாக புகுத்திவிட்டாரா?
அல்லது
4) ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை அல்லாஹ் முஹம்மதுவிற்கு கனவில் காட்டினார் என்ற கட்டுக்கதையை சொல்லிவைத்தாரா?
குர்ஆனும் ஹதீஸ்களும் இறைத்தூதர்களுக்கு கனவு என்பது வெளிப்பாடு வரும் விதங்களில் ஒரு வகை என்று அங்கீகரிப்பதினால், இஸ்லாமியர்கள் "ஆயிஷாவின் திருமணம்" இறைவெளிப்பாட்டினால் நடைப்பெறவில்லை என்று சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆக, நாம் மேலே சொன்ன நான்கு தெரிவுகளில் ஒன்றை கட்டாயமாக தெரிந்தெடுக்கவேண்டிய நிலையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவைகளில் எந்த ஒரு தெரிவை அவர்கள் எடுத்தாலும் சரி, இவ்விவரங்களில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும்.
மூலம்: Muhammad's 'divinely appointed' marriage(s):Zaynab's and Aisha's contradictory accounts
--
3/10/2010 09:47:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது