பைபிளை வாசித்தல்
Reading the Bible
நீங்கள் பைபிளை வாசிக்கத் தயாராய் இருக்கிறீர்கள், நல்லது. உங்களிடம் ஒரு முழு வேதாகமம் (பைபிள்) இருக்கலாம் அல்லது இயேசுவைப் பற்றிக் கூறும் பகுதி மட்டும் இருக்கலாம். கிறிஸ்துவர்கள் இதைப் புதிய ஏற்பாடு என்றும் முந்தைய பகுதியை பழைய ஏற்பாடு என்றும் அழைப்பார்கள். இந்தப் பெயர்கள் மிக முக்கியமான அர்த்தத்தைக் கொண்டவை. தேவன் மனிதர்களுடன் சரித்திர காலங்கள் முழுவதும் உடன்படிக்கைகளை (Agreements/Testaments) ஏற்படுத்திக்கொள்கிறார். அவர் பல வழிகளில் தம்மை யார் என்று மனிதனுக்கு வெளிப்படுத்தி தம் கட்டளைகளை நாம் நம்பிக்கையுடனும் கீழ்ப்படிதலுடனும் கடைப்பிடிக்க ஆணையிடுகிறார்.
பைபிளைப்பற்றி முதலாவதாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அமைப்பினால் பைபிள் குர்ஆனிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதே. குர்ஆன் ஷரீப்பின் வசனங்கள் அல்லாவின் நேரடிப் பேச்சு போன்று கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது முகமது மூலமாக வெளிவந்ததாயினும் அவர் இவ்விடத்தில் பாயும் நீரின் தன்மை மாறாமல் கொண்டுச் செல்லும் வாய்க்கால் போன்று சித்தரிக்கப்படுகிறார்.
இதற்கு மாறாக பரிசுத்த வேதாகமம் ஒரு சில வருடங்களிலோ ஒரே நபராலோ எழுதப்படவில்லை. அது பல நூற்றாண்டுகளில் பற்பல வேறுபட்ட நபர்களால் எழுதப்பட்டது. இதில் தேவன் பல சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் பரிசுத்தவான்களின் சிந்தனைகள் வார்த்தைகள் மூலமும் பேசுகிறார். அவர் சரித்திரபூர்வமாகவும், குறிப்பாக இயேசு கிறிஸ்து வழியாகவும் பேசுகிறார்.
பைபிளை வாசிக்கும்போது நாம் தேவனின் வார்த்தையின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த வித்தியாசத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். பைபிள் குர்ஆனைப் போன்றே இருக்கும் என நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாற்றத்துக்கு உள்ளாவோம். எனினும் திறந்த மனதுடன் நாம் பைபிளை வாசிப்போமானால் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் தேவன் நம்மோடு ஒரு புதுமைமிக்க வல்லமையான வழியில் பேசுவார்.
குர்ஆனைப் போல் அல்லாது, பைபிள், கடவுளின் சட்டத்தையே முக்கியப் பொருளாகக் கொண்டதல்ல. எனினும் அதில் பல பகுதிகள் தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் பற்றி உண்மையில் குறிப்பிடத்தான் செய்கின்றன. தேவன் இந்த உலகத்தினைப் படைத்த ஒரு வல்லமையான படைப்பாளி என்ற செய்தியுடன் பைபிள் தொடங்குகிறது (ஆதியாகமம் : 1 ஆம் அதிகாரம்). அடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து அவருடனான நெருங்கிய தொடர்பை இழக்கும்போது அவரது தூய்மையையும் பரிசுத்தத்தையும் நாம் காண்கிறோம். அடுத்து வரும் "சரித்திர நூல்"களில் இஸ்ரவேல் மக்கள் தங்களிலும் தங்களின் எதிரிகளிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு எவ்விதம் செயல்பட்டது என உணர்வதைப் பார்க்கிறோம். அவர் எவ்விதம் அவர்களது வாழ்வின் நடைமுறைகளுக்கான கட்டளைகளைக் கொடுத்தார் (குறிப்பாக பத்துக்கட்டளைகள்) என அறிகிறோம்.(யாத்திராகமம் 20)
எனினும், பைபிள் வெளிப்படுத்தும் தேவனின் மிக முக்கியமான தனமைகள் இவை அல்ல. அது மனிதர் மீது அவர் பொழியும் மாசற்ற அன்பு மட்டுமே. அதாவது பாவத்தில் ஆழ்ந்த இஸ்ரவேல் மக்களின் மீது அவர் கொண்ட பொறுமையான அன்பே ஆகும். அது பிரத்தியோகமான வழிகளில் தம்மைப் புரிந்துகொண்ட நோவா, ஆபிரகாம், மோசே, யோபு, தாவீது போன்றோர்களைத் தெரிந்தெடுத்தது அவரது தூய அன்பே.
பழைய உடன்படிக்கையில், தேவன், அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களிடம் எவ்வளவு முறை நெருங்கி வந்தார் என்றும் அவர்களோ அவருக்குக் கீழ்படியாமல் அவரை விட்டு எத்துனை முறை விலகிச் சென்றார்கள் என்பதையும் காண்கிறோம். இதனால் தேவன் இறுதியாக மனிதர்களால் மீறப்பட்ட உடன்படிக்கையை நிறைவேற்றவும், அதனை தொடரச்செய்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வருகிறார். இம்முறை அவர் அதை பாவமுள்ள பலவீனமான மனிதர்களின் கீழ்ப்படிதல் மூலமாக அல்லாமல், பரலோகத்தினின்று இறங்கிய இரட்சகராகிய மேசியா(மஸீஹா)வின் மூலம் ஸ்தாபிக்கிறார். இந்த மேசியா, தீர்க்கதரிசனங்களின் மூலம் பல முறை முன்னறிவிக்கப்பட்டவர். இப்போது அவர் உன்னதமான ரோம சாம்ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு பின் தங்கிய பகுதியில் ஒரு ஏழைவீட்டில் ஒரு சாதாரண தச்சனின் மகனாகப் பிறந்தார். ஆம், தேவன் மகத்துவமும் மகா வல்லமையும் கொண்டவர் தான், ஆனாலும் அவர் தமது வல்லமையினாலும், மகத்துவத்தினாலும் நாம் முற்றியும் அழிந்துப் போகாதபடி அவரை இனம் கண்டுகொள்ளும் பொருட்டு அவற்றை மறைத்து வெளிப்பட்டார்.
புதிய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது நமது மனதில் தவறான பார்வை எதுவும் ஏற்பட்டு விடாதபடி நாம் எச்சரிக்கையாய் இருத்தல் அவசியம். இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்லது ஒரு நபி மட்டுமே எனச் சொல்வோமானால், நாம் முற்றிலும் அவரைப் புரிந்துகொள்ளவே மாட்டோம். அவர் மனிதனை விடவும் மேன்மை பொருந்தியவர் என்றும் ஒரு நபி (தீர்க்கதரிசி / Prophet)யைவிட மேலானவர் என்றும் பைபிள் நமக்குக் காட்டுகிறது. புதிய ஏற்பாடு அவரைப்பற்றிக் கூறும் செய்திகள் அனைத்தையும் முற்றிலும் நீங்கள் வாசிக்கும் வரைக்கும் அவரைப்பற்றி மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் ஒரு முடிவிற்கு வராமல் இருங்கள். குறிப்பாக இரட்சிப்பு பற்றி அவர் சொல்லிய வார்த்தைகளை கவனமாய் தியானியுங்கள். அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவரது ஊழியர்கள் அவரைப்பற்றிக் கூறியவைகளைச் சிந்தியுங்கள். பைபிளின் சீரிய நோக்கம் தேவ கட்டளைகளை நமக்குக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் ஒரு உன்னதமானவரை, அதாவது ஒருபோதும் நமக்கு நாமே கூடச் செய்ய முடியாதவைகளைச் செய்யக்கூடிய ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்துகிறது.
இந்த இயேசு கிறிஸ்துவானவர், புதிய ஏற்பாட்டில் மட்டுமின்றி ஒரு வகையில் பழைய ஏற்பாட்டிலும் கூடப் பேசப்படும் ஒரு மையக்கருத்தானவர் ஆவார். பழைய ஏற்பாடு அவர் பூமியில் தோன்றிய காலத்திற்குப் பல நூற்றண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருந்த போதிலும் அவரைப்பற்றிய பல குறிப்புகள் அதில் காணப்படுகின்றன. உதாரணமாக யோசேப்பின் வாழ்க்கையில் அவரது அடிச்சுவட்டை நாம் காண முடியும். இஸ்ரவேலரின் பலியிடும் முறை நமது பாவங்களுக்கான தண்டனைக்குரிய பரிகாரத்தின் தேவையை நமக்கு விளக்குகிறது. தீர்க்கதரிசிகளும் கூட நமக்காகப் பாடுபட்டு நம்மை இறுதி வெற்றி வரை வழிநடத்தி அவரது ஆவிக்குரிய நித்திய ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்ள வருகின்ற ஒருவரைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டில் நிறைவேறுகின்றன. அதில் அவரது வாழ்க்கையைப் பற்றின நான்கு வகையான பார்வைகள் கொடுக்கப்பட்டுள்ளன (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் சுவிசேஷங்கள்). அதன் பின்பு அவரது (நேரடி சீடர்களின்) அடியார்களின் சரித்திரமும் (அப்போஸ்தலர் நடபடிகள்) அதைத் தொடர்ந்து அவர்களது போதனைகளும் (புதிய ஏற்பாட்டின் பிற்பகுதியில்) உள்ளன.
ஆம், பைபிள் குர்ஆனிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. அதனுடைய சரித்திரம் வித்தியாசமானது; அதன் நோக்கம் வித்தியாசமானது. அதன் மையக்கருத்து வித்தியாசமானது. பல்வேறு காலங்களைச் சார்ந்த புத்தகங்களின் தொகுப்பாய் ஒரு நூலகமாய் இருந்தபோதும் ஒரே புத்தகமாக ஒரே தொனியில் தேவனின் குரலை எடுத்துரைக்கிறது. நீங்கள் பைபிளைப் படிக்கும் போது அது உங்களிடமும் பேசட்டும்! "தேவனே, உம்மை எனக்கு வெளிப்படுத்தும்" என ஜெபியுங்கள். நீங்கள் கருத்துடன் ஜெபிக்கும் பட்சத்தில் அவர் உங்களின் இந்த ஜெபத்திற்கு நிச்சயம் பதிலளிப்பார்.
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
Comment Form under post in blogger/blogspot