பீஜேயின் அறியாமை: இயேசு பயப்பட்டு வரி செலுத்தினாரா?
"இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு
பீஜேயின் அறியாமை: இயேசு பயப்பட்டு வரி செலுத்தினாரா?
முன்னுரை: பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சில மறுப்புக்களை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.
1) விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!
2) பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்.
3) இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே.
இந்த கட்டுரையில், பீஜே அவர்களின் இன்னொரு அறியாமையை (அ) வேண்டுமென்றே திருத்திக் கூறும் அவரின் யுக்தியை பார்க்கப்போகிறோம். "இயேசு அரசாங்கத்திற்கு பயப்பட்டு வரி செலுத்தினார், அவர் அஞ்சியிருக்கிறார், இப்படி இறைவன் அஞ்சி வரி செலுத்தமாட்டார்" என்று பீஜே எழுதியுள்ளார்.
இப்போது, பீஜே அவர்கள் எழுதியவைகளைக் காண்போம்:
17. கடவுளுக்கு அச்சமில்லை
கடவுள் அச்சத்திற்கு அப்பாற்பட்டவர்; யாருக்கும், எதற்கும் அஞ்சத் தேவையற்றவர். ஆனால் இயேசு அச்சமுற்று வரிப்பணம் வசூலிக்கிறவர்களிடம் வரி செலுத்தக் கூறியிருக்கிறார்.
அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்? என்று கேட்டார். அதற்குப் பேதுரு அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி, அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
(மத்தேயு 17:25-27)
அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.
பீஜே அவர்கள் கூறியவைகளின் சுருக்கம் இதுதான்:
1) அந்நியர்களிடம் தான் வரி வசூல் செய்யவேண்டும், குடிமக்களிடம் வசூல் செய்யக்கூடாது என்று இயேசு வாழ்ந்த காலத்தில் சட்டம் இருந்ததாம்.
2) இதை தவறு என்று கண்டிக்கும் இயேசு, அதிகாரிகளுக்கு அஞ்சி வரியை செலுத்தினாராம்.
3) வரியை நான் செலுத்தமாட்டேன் என்று இயேசு சொல்லியிருந்தால், விளைவுகளை சந்திக்கவேண்டி வருமே என்று பயப்பட்டு இயேசு வரியை செலுத்திவிட்டாராம்.
4) ஆக, இயேசு பயப்பட்டு வரியை செலுத்தியபடியால், அவர் இறைவன் அல்ல என்பது பீஜே அவர்களின் வாதம்.
பீஜே அவர்களுக்கு பைபிளை படித்து புரிந்துகொள்ள தெரியவில்லை என்பது இந்த மறுப்பை படித்த பிறகு எல்லாருக்கும் தெரிந்துவிடும். அதாவது, அவர் எடுத்துவைத்த ஆரம்ப விவரங்களே தவறு, அவர் புரிந்துக்கொண்டதே தவறு, சிறிதளவாவது ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தால், இந்த பிரச்சனைகள் வராது.
சரி, இனி மறுப்புக்குச் செல்வோம்.
1) பீஜே அவர்கள் செய்த முதல் தவறு: வசனம் கூறுவது அரசாங்க வரியா / தேவாலய வரியா
மாற்று மார்க்கத்தவர்களின் வசனங்களுக்கு பொருள் கூறுவதற்கு முன்பு,
அவ்வசனங்கள் சொல்வது என்ன?
அவைகளுக்கு நான் சொல்லப்போகும் பொருள் சரியானதா?
இந்த வசனங்கள் குறித்த சரித்திர பின்னனி என்ன?
பைபிள் விரிவுரை என்ன சொல்கிறது?
போன்றவைகளை தெரிந்துக்கொள்ளாமல், ஆராயாமல், சொந்தமாக அடித்துவிட்டு இருக்கிறார் பீஜே அவர்கள்.
ஏன் நான் இப்படி எழுதுகின்றேன் என்றுச் சொன்னால்:
முதலாவதாக, இவ்வசனங்களில் சொல்லப்பட்ட வரியை இயேசு அரசாங்கத்திற்கு கட்டினார் என்று பீஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.
இரண்டாவதாக, இயேசு சொன்ன எடுத்துக்காட்டின் பொருளை பீஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.
மத்தேயு 17:24 லிருந்து 27 வரையில் உள்ள விவரங்கள் அரசாங்க வரியைப் பற்றி கூறவில்லை, அது தேவாலய வரியைப் பற்றி கூறுகின்றது, இதனை பீஜே அவர்கள் புரிந்துக்கொள்ள மேலே நான் சொன்னது போல கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும்.
20 வயதை அடைந்த ஒவ்வொரு யூதனின் கடமை:
யூத கணக்கெடுப்பில் வரும் இருபது வயதை அடைந்த ஒவ்வொரு ஆணும் தேவாலயத்தின் (பரிசுத்த ஸ்தலத்தின்) பராமரிப்பு செலவுகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு அரைசேக்கல் காணிக்கை தேவாலயத்திற்கு கொடுக்கவேண்டும். இதனை வசூலித்து ஆலயத்தின் செலவுகள் செய்யப்படும். இந்த கட்டளை மோசே மூலமாக தேவன் யூதர்களுக்கு கொடுத்து இருந்தார். இதனை யூதர்கள் கடைபிடித்தனர், அவர்கள் இஸ்ரவேலில் இருந்தாலும் சரி, வேறு நாட்டில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் செலுத்தி வந்தனர். இந்த விவரங்களை யாத்திராகமத்தில் படிக்கலாம்:
எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும். (யாத்திராகமம் 30:13-14, இன்னும் பார்க்க யாத்திராகமம் 38:26)
தேவாலயத்திற்கு செலுத்தும் வரியைப் பற்றி தெரிந்துக்கொள்ளாமலேயே தன் வியாக்கீனத்தைக் கொடுக்கிறார் பீஜே.
மத்தேயு 17:24ம் வசனம் - ஆங்கில மொழியாக்கம்:
பீஜே அவர்கள் ஆங்கில மொழியாக்கத்தில் இவ்வசனங்களை படித்து இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஒருவேளை படிந்து இருந்திருந்தாலும், தேவாலய வரியைப் பற்றித் தான் இவ்வசனம் பேசுகின்றது என்று புரிந்து இருந்திருந்தாலும், தான் சுமத்தவேண்டும் என்று நினைத்த குற்றச்சாட்டை சுமத்தவேண்டும் என்பதற்காக மறைத்து இருந்திருப்பார். ஏன் இப்படி சொல்கின்றேன் என்றுச் சொன்னால், பீஜே அவர்கள் மத்தேயு 17ம் அதிகாரம் 25 லிருந்து 27 வரையுள்ள வசனங்களை மேற்கோள் காட்டினார், ஆனால், மத்தேயு 17:24ம் வசனத்தை மேற்கோள் காட்டவில்லை, இந்த வசனத்தில் தான் வரியைப் பற்றிய விவரம் வருகிறது.
இப்போது மத்தேயு 17:24ம் வசந்த்தை நாம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிப்போம்:
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். (மத்தேயு 17:24)
Matthew 17:24 (New International Version)
The Temple Tax
24 After Jesus and his disciples arrived in Capernaum, the collectors of the two-drachma tax came to Peter and asked, "Doesn't your teacher pay the temple tax[a]?"
Footnotes:
a. Matthew 17:24 Greek the two drachmas
Link: http://www.biblegateway.com/passage/?search=mat%2017:24&version=NIV
மேலேயுள்ள வசனத்தில் ஆங்கில மொழியாக்கத்தில் "இரண்டு திராக்மா" பணம் இயேசு செலுத்துவதில்லையா? என்று வரியை வசூலிப்பவர் கேட்கிறார். இந்த இரண்டு திராக்மா என்பது கிரேக்க நாணயமாகும். இந்திய பணத்தை "ரூபாய்" என்றுச் சொல்வது போல, கிரேக்க பணத்தை திராக்மா என்று அழைப்பார்கள். (கிரேக்க வார்த்தை: "டிட்ரக்மோன்" - δίδραχμον – didrachmon - did'-rakh-mon)
இந்த வரியானது ஆலயத்திற்கு கொடுக்கவேண்டும் என்று மோசே கட்டளையிட்ட அரைசேக்கல் காணிக்கையாகும், இதனை கிரேக்க நாணயத்தில் இரண்டு திராக்மா என்று சொல்வார்கள். (கிரேக்க திராக்மா பற்றி அறிய படிக்கவும்: http://en.wikipedia.org/wiki/Greek_drachma)
மீனின் வயிற்றில் வெள்ளி நாணயம்:
பேதுரு இயேசுவிடம் இந்த ஆலய வரிப்பணம் பற்றி கேட்பதற்கு முன்பாகவே, இயேசு பேதுருவிடம் அதைப் பற்றி பேசி, ஒரு மீனைப்பிடித்து முதலில் பிடிக்கும் மீனின் வாயில் இருக்கும் ஒரு வெள்ளி நாணயத்தை "உனக்காகவும் எனக்காகவும்" (இரண்டு பேருக்காக) ஆலய வரியை செலுத்து என்று கூறுகிறார்.
இந்த வெள்ளிப்பணமானது, நான்கு திராக்மாவிற்கு சமமானது, எனவே இது இரண்டு நபர்களுக்கு ஆலய வரியை செலுத்த போதுமானது. (இந்த வார்த்தை கிரேக்கத்தில் ஸ்தாத்தேர் என்பதாகும் : στατήρ, statēr - stat-air' - கிரேக்க எபிரேய அகராதி - http://www.bibletools.org/index.cfm/fuseaction/Lexicon.show/ID/G4715/stater.htm)
இதுவரை நாம் மேலே கண்ட விவரங்கள் மூலம் அறிவது என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஆலய வரியைப் பற்றி பேசும் போது, அதை அரசாங்க வரி என்று நினைத்து எழுதி பீஜே அவர்கள் தவறு செய்துள்ளார்.
2) பீஜே அவர்கள் செய்த இரண்டாம் தவறு: இயேசு சொன்ன எடுத்துக்காட்டின் பொருளை அறியாமல் எழுதிய பீஜே:
முதலாவது, பீஜே அவர்கள் தேவாலய பணிக்காக வசூலிக்கப்படும் வரியைப் பற்றி புரிந்துக்கொள்ளாமல், அதை அரசாங்க வரி என்று நினைத்து முதல் தவறைச் செய்தார். இரண்டாவதாக, அவர் இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளையும் புரிந்துக்கொள்ளாமல் இரண்டாம் தவறையும் புரிந்துள்ளார்.
இயேசு என்ன கூறினார் என்பதை இப்போது படிப்போம்:
மத்தேயு 17:25-26
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
இந்த வசனங்களை எப்படி பீஜே புரிந்துக்கொண்டார் என்பதை கீழே படியுங்கள்:
பீஜே அவர்கள் எழுதியது:
அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
அந்நியர்களிடம் தான் வரி வாங்க வேண்டும், குடிமக்களிடம் வாங்கக்கூடாதாம், இப்படி ஒரு சட்டம் இருந்ததாக இயேசு கூறினாராம். மேலே உள்ள இரண்டு வசனங்களை படித்து, இஸ்லாமிய அறிஞர் புரிந்துக்கொண்டதைப் பார்த்தால், ஆச்சரியமாக உள்ளது.
பீஜே அவர்களே, இரண்டு வசனங்களை படித்து புரிந்துக்கொள்ளத் தெரியாத நீங்கள் எல்லாம் எப்படி புத்தகம் எழுத வந்துவிட்டீர்கள்?
சரி, இப்போது இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளை பார்ப்போம்.
ஒரு அரசர் புதிய வரியை சுமத்தும்போது, அதை யாரிடம் வாங்குவார்?
தன் குடும்ப நபர்களிடம் வாங்குவாரா? அதாவது இளவரசர்களிடம், இளவரசிகளிடம் வாங்குவாரா? - தன் சொந்த மகன்/மகளிடம் வாங்குவாரா?
அல்லது
தன் நாட்டு மக்களிடம் வாங்குவாரா?
இந்த கேள்விக்கு பீஜே அவர்கள் என்ன பதில் சொல்லுவார்? அரசர் நாட்டு மக்களிடம் வாங்குவார், தன் சொந்த மகனிடமோ, மகளிடமோ வாங்கமாட்டார் என்று தான் பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். இதே பதிலைத் தான் பேதுருவும் சொன்னார்.
"அந்நியர்" என்று இயேசு சொன்னது, குடிமக்களைத் தானே தவிர, வேறு நாட்டு மக்களை அல்ல. ஆனால், பீஜேவிற்கு அந்நியர் என்று இயேசு சொன்னது, வேறு நாட்டு மக்களைப் பற்றி என்று புரிந்துள்ளது. பீஜே அவர்களே, உங்களுடைய லாஜிக் எல்லாம் கிறிஸ்தவர்களிடமும், பைபிளிடமும் பளிக்காது.
ஆக, இயேசு சொன்ன வசனங்களில் "அந்நியர்" என்றுச் சொன்னது, அந்த அரசனின் நாட்டு மக்களை குறிக்கும், இந்த சாதாரண விஷயத்தையும் பீஜேவிற்கு விளக்கவேண்டும் என்ற நிலையில் பீஜே இருக்கிறார்.
இயேசு அந்த நாட்டு அரசனின் மகனாக இருந்தாரா, இளவரசராக இருந்தாரா?
இயேசு பிள்ளைகள் வரியை கட்டவேண்டியதில்லை என்றுச் சொன்னதினால், தன்னை பிள்ளை என்றுச் சொல்லிக்கொண்டார். அப்படியானால், "இயேசு அந்த நாட்டு அரசனின் மகனாக இருந்தாரா, இளவரசராக இருந்தாரா?" என்ற கேள்வி எழும். இயேசு அந்த நாட்டு அரசனின் மகன் அல்ல, அப்படியிருக்கும் போது பிள்ளைகள் வரியை செலுத்த வேண்டியதில்லையே என்று ஏன் கூறினார்?
இந்த இடத்தில் உள்ள விவரத்தை சரியாக புரிந்துக்கொள்ளாததினால் தான் பீஜே அவர்கள் தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்து இருக்கிறார்.
இயேசு சொன்ன உதாரணத்தின் பொருள்
எருசலேமில் இருக்கும் தேவாலயம் பிதாவாகிய தேவனின் அரசசபையாகும், தேவன் அதன் அரசராவார், இயேசுக் கிறிஸ்து அவரது பிள்ளை, அதாவது இளவரசர். அப்படியிருக்கும் போது, தேவாலய வரி என்பது, அரசனாகிய தேவன் விதிக்கும் வரி. இந்த வரியை யாரிடம் வாங்கவேண்டும்? அந்நியர்களிடம் வாங்கவேண்டுமே அதாவது குடிமக்களிடம் வாங்கவேண்டுமே ஒழிய, தேவனின் குமாரனாகிய இயேசுவிடம் (இளவரசரிடம்) வாங்கக்கூடாது. இதைத் தான் இயேசு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்.
அரசன், அரச சபை = தேவன், தேவாலயம்
இளவரசன் = தேவனின் குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து.
அரச சபை பராமரிப்பிற்கு வாங்கப்படும் வரி = நாட்டு குடிமக்களிடம் பலவகையான வரிகளாக வாங்கவேண்டும்
இதைத் தான் இயேசு மேற்கண்ட வசனங்களில், பிள்ளைகள் (இயேசு) வரியை செலுத்தவேண்டுவதில்லை என்று கூறினார்.
இதனை புரிந்துக்கொள்ளாமல், பீஜே அவர்கள் அந்நியர்கள் என்றுச் சொன்னால், வேறு நாட்டு மக்களிடம் என்று நினைத்துக் கொண்டார். எந்த அரசனாவது தான் ஆட்சி செய்யாத நாட்டு மக்கள் தன் அரச சபை / நாட்டு பராமறிப்பிற்கு தேவையான பணத்திற்காக வரியை வேறு நாட்டு மக்களிடம் வாங்கமுடியுமா? கெட்கத்தான் முடியுமா? இந்த சிறிய விஷயத்தையும் பீஜே புரிந்துக்கொள்ளவில்லை என்பது கவலையைத் தருகிறது. பீஜே அவர்கள், இப்படி தவறாக புரிந்துக்கொண்டு, அதை அக்காலத்தில் ஒரு வழக்கம் /சட்டம் இருந்தது என்று இயேசு சொன்னதாக கதை விடுகிறார்.
ஆக, பீஜே அவர்கள் இந்த ஓவரிலும் ஒரு விக்கட்டையும் எடுக்கவில்லை, அதற்கு பதிலாக ஒவ்வொரு பந்தும் தமிழ் கிறிஸ்தவர்களால் பவுண்டிரிக்கு துரத்தப்பட்டது என்பது தெளிவாக புரிகின்றது.
இயேசு பயந்து தான் வரியை செலுத்தினாரா?
இப்போது பீஜே அவர்கள் போட்ட அடுத்த ஓவருக்குச் செல்வோம் (இது இந்த கட்டுரையின் கடைசி ஓவரும் கூட)
பீஜே அவர்கள் எழுதியது:
அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.
இப்போது தான் இந்த கட்டுரை எழுதுவதற்கு என்னைத் தூண்டிய, பீஜே அவர்களின் வரிகளை நாம் அலசப்போகிறோம்.
பீஜே அவர்கள் செய்த முதல் தவறு: எந்த வரி என்று புரிந்துக்கொள்ளாமையாகும்.
இரண்டாம் தவறு: இயேசுவின் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமையாகும்.
மூன்றாம் தவறு: மேற்கண்ட இரண்டு தவறுகளால் ஏற்பட்ட மூன்றாம் தவறாகும். அதாவது இயேசு அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுக்கவில்லை, அநீதியை எதிர்க்கவில்லை என்று பொருள் படவேண்டும் என்பதற்காக, "இயேசு பயப்பட்டுத் தான் வரியை செலுத்தினார்" என்று தன் முடிவைச் சொல்லியுள்ளார்.
முதலாவதாக, இந்த வசனங்களில் அரசாங்கத்தின் இடையூறு இல்லை என்பதை நாம் மேலே விளக்கினோம். அதாவது இது தேவாலய வரியைப் பற்றிச் சொல்கிறது, அரசாங்கத்தின் வரியைப் பற்றி அல்ல.
இரண்டாவதாக, இயேசு பேசும் போது முக்கியமான ஒரு வாக்கியத்தைச் சொல்லியுள்ளார், இது போதும், இயேசு பயப்பட்டு வரி செலுத்தவில்லை என்பதற்கு, அதனை பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனங்களிலேயே படிப்போம்.
மத்தேயு 17: 26-27
அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
எருசலேம் தேவாலயத்தைவிட பெரியவராக இருந்தவராகிய இயேசுக் கிறிஸ்து, தேவாலய வரியை செலுத்த வேண்டியதில்லை காரணம்,அவர் தேவகுமாரன். இருந்தபோதிலும் நாம் வரியை செலுத்துவோம் என்று இயேசு கூறியுள்ளார்.
மட்டுமல்ல, நியாயமானபடி நாம் தேவாலய வரியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும் , "அவர்களுக்கு ஒரு இடறலாக, ஒரு தடங்களாக இல்லாதபடிக்கு" நாம் வரியை செலுத்துவோம் என்று இயேசு கூறினார்.
யாருக்கும் தடங்கலாக இருக்ககூடாது என்று இயேசு விரும்பினார், முக்கியமாக தேவாலயத்தின் பராமரிப்பிற்காக, ஒழுங்கிற்காக செலுத்தப்படவேண்டிய வரியை செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.
நற்செயல்கள் பற்றி போதிக்கும் இயேசுக்கிறிஸ்து, தேவாலயத்தில் நடக்கும் அட்டூழியங்களை சகித்துக்கொள்ளாமல் கண்டித்த இயேசுக்கிறிஸ்து, அதே தேவாலயத்திற்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தவில்லை என்று மக்கள் அறிந்தால், அதனை ஒரு வாய்ப்பாக எண்ணி சிலர் வரியை செலுத்த மறுப்பார்கள். இதனால், வரி வசூல் செய்யும் தேவாலய ஊழியர்களுக்கு அனேக பிரச்சனைகள் உண்டாகும். இதனை தடுக்க இயேசு வரியைச் செலுத்தினார்.
ஆக,பீஜே அவர்களுக்கு நான் தெளிவாக்க விரும்புவது என்னவென்றால், "இயேசு பயப்பட்டு வரியை செலுத்தவில்லை, இயேசு அவர்களுக்கு தடங்கலாக இருக்கவேண்டாம்" என்ற காரணத்திற்காகவே வரியை செலுத்தும்படி பேதுருவிடம் கூறினார்.
எனவே, பீஜே அவர்களே, உங்களின் ஆராய்ச்சியை சிறிது நிதானமாகவும், ஆழமாகவும் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் மாறமாட்டேன், இப்படித் தான் செய்வேன், எழுதுவேன் என்று மறுபடியும் அடம்பிடித்தால், ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவனும் உங்கள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி, உங்களின் இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று கேட்பான். இன்று நான் கேட்கும் இதே கேள்விகளை தமிழ் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உங்களிடம் கேட்பார்கள் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.
விடுபட்ட ஒரு சில விவரங்கள்: இந்த நிகழ்ச்சியின்போது, வரி கேட்பவர்கள் பேதுருவிடம் கேட்கும் கேள்வி "உங்கள் போதகர் தேவாலய வரியை செலுத்துவதில்லையா?" என்பதாகும். அதற்கு பேதுரு செலுத்துகிறார் என்றுச் சொன்னார், நான் இயேசுவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றுச் சொல்லவில்லை. ஆக, ஒவ்வொரு ஆண்டும் (கிட்டத்த மூன்றரை ஆண்டுகள் பேதுரு இயேசுவுடன் இருந்தார்) இயேசு ஆலய வரி செலுத்துவது பேதுருவிற்கு தெரிந்துஇருக்கும், அதனால் தான் "செலுத்துகிறார்" என்று பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம், இயேசு சர்வ வியாபி, சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் சர்வ ஞானி என்பதை நிருபித்துள்ளார். ஒரு மீனின் வயிற்றில் இருக்கும் நாணயம் அவருக்கு தெரிந்து இருக்கிறது, மற்றும் அந்த மீன் சரியாக பேதுரு போடும் தூண்டியில் வந்து விழவேண்டும் என்றுச் சொல்லி அவர் அற்புதம் செய்துள்ளார். ஆக, பீஜே அவர்களே, இந்த நிகழ்ச்சிப் பற்றி எழுதி, இந்த விவரங்களை எழுத உதவி செய்தபடியால் உங்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.
அரசாங்க வரியைக் குறித்து இயேசுக் கிறிஸ்து:
தேவாலய வரியைப் பற்றி நாம் இதுவரைக் கண்டோம், அரசாங்க வரி பற்றி இயேசு என்ன கூறுகின்றார் என்பதை அறிய மத்தேயு 22:15-22 வரை படிக்கவும். அரசனுக்கு செலுத்தும் வரியை அரசனுக்கும், ஆண்டவருக்கு செலுத்தவேண்டிய வரியை ஆண்டவருக்கும் செலுத்தும்படி இயேசு கூறினார்.
இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (மத்தேயு 22:21)
கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இயேசு காட்டிய வழியில் நடக்கின்றோம் என்றுச் சொல்லுகின்ற நாம், அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரியை சரியாக கட்டுகின்றோமா? திருச்சபையின் பராமறிப்பிற்கும், இதர செலவுகளுக்கும் தேவையானவற்றை செலுத்துகின்றோமா? அரசாங்கத்தை ஏமாற்றி சரியான வரியை கட்டத்தவறும் கிறிஸ்தவன், கிறிஸ்துவை உடையவன் அல்ல. இயேசு தேவாலய வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாதவராக இருந்தாலும், அந்த வரியை செலுத்தினார். இயேசுவே தேவாலய வரியை செலுத்தவில்லை நாம் ஏன் செலுத்தவேண்டும் என்று மக்கள் சொல்லக்கூடாது என்பதற்காகவும், யூத அதிகாரிகளுக்கு ஆலய பராமரிப்பு செய்வவற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், இயேசு வரியை செலுத்தினார். நாம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துகின்றோமா? சிந்திக்க வேண்டுகின்றேன்.
முடிவுரை: அருமை இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களே, உங்களின் ஆய்வு தவறானது, வியாக்கீனங்கள் தவறானது. நான் உங்கள் முழு புத்தகத்திற்கும் பதில்கள் தரும் வரை அடுத்த பதிப்பை பதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், பெரும்பான்மையான விவரங்களை நீங்கள் உங்கள் புத்தகத்தில் மாற்றவோ, நீக்கவோ வேண்டி வரும்.
இப்படி தவறாகவும், வேண்டுமென்று திருத்தியும் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். நியாயமான கேள்விகள், விவரங்களை எழுதினால், பதில்கள் தருவதற்கு நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு, சொந்தமாக பொய்களை எழுதி, யார் கேட்பார்கள் என்ற எண்ணத்துடன் எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
கடைசியாக தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இயேசு பயந்து வரியை செலுத்தவில்லை, அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், தேவாலத்தின் செலவுகளுக்காக கேட்கப்படும் வரி நியாயமானது என்பது மக்களும் உணர்ந்து கொடுக்கவேண்டுமென்பதற்காகவும் செலுத்தினாரே தவிர பயந்து அல்ல.
கடவுளுக்கு அச்சமில்லை என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய அடுத்த வரிகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன்.
--
8/07/2010 09:47:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot