இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, May 8, 2010

இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே

 

 

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு:

இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே

"பைபிளின் துணையுடன் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்க பீஜே போன்ற இஸ்லாமியர்கள் எடுக்கும் முயற்சி, குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளின் துணைக்கொண்டு, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றும், முஹம்மது ஒரு அஹிம்சாவாதி என்றும் நிருபிக்க எடுக்கும் முயற்சிக்கு சமமாகும். இவர்களால் பைபிளைக் கொண்டு இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கவும் முடியாது, அதே போல, இஸ்லாமிய நூல்களின் துணைக்கொண்டு இஸ்லாம் ஒருஅமைதி மார்க்கம் என்று நிருபிக்கவும் முடியாது".

முன்னுரை: "இயேசு இறைமகனா?" என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு கீழ்கண்ட பதில்கள் இதுவரை தரப்பட்டுள்ளது.

இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)

பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்

இதன் தொடர்ச்சியாக "இயேசு தன்னை மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்ட வசனங்கள் பற்றி பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தில் எழுதியவைகளுக்கு பதிலாக இக்கட்டுரை பதிக்கப்படுகின்றது.

இக்கட்டுரையை கீழ்கண்ட பாகங்களாக பிரித்து பதில் தருகிறேன்.

பாகம் 1: இயேசு மனிதன் என நிருபிக்க நினைத்து இறைவன் என நிருபித்த பீஜே

முதல் பாகத்தில் (இந்த கட்டுரையில்) பீஜே அவர்கள் காட்டிய வசனங்கள் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக இயேசுவின் இறைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது என்பதை பீஜே அவர்களின் மேற்கோள் வசனங்களை காட்டி பதில் தரப்படுகின்றது..

பாகம் 2: ஏன் இயேசு தன்னை மனுஷ குமாரன் என்றுச் சொன்னார்?

இரண்டாம் பாகத்தில், ஏன் இயேசு தன்னை மனுஷ குமாரன் என்றுச் சொன்னார் என்பதைக் பார்க்கப்போகிறோம்.

இந்த முதல் பாகத்தை முழுவதுமாக படிப்பவர்கள், "பீஜே அவர்கள் காட்டிய வசனங்கள் அவர் சொல்ல வந்த செய்திக்கு எதிராக இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வார்கள்".

பாகம் 1

இயேசு மனிதன் என நிருபிக்க நினைத்து இறைவன் என நிருபித்த பீஜே

பீஜே அவர்கள் எழுதியவை

இயேசு மனுஷ குமாரன்


இறை மகன் என்பதை இறைவன் என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள்,

ஈஸா குர்‍ஆன் பதில்:

இறைமகன் என்றால் என்ன என்பதை இஸ்லாமியர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இறைமகன் என்று இயேசுவை கிறிஸ்தவர்கள் அழைத்தால் அதன் பொருள் என்ன என்று அல்லாஹ்விற்கே தெரியவில்லை. இதைப் பற்றி பீஜே அவர்களின் "இயேசு இறைமகனா" என்ற உப தலைப்பில் அவர் எழுதியவைகளுக்கு பதில் அளிக்கும் போது பார்க்கலாம்.

பீஜே அவர்கள் எழுதியவை

இயேசு தம்மை மனிதன் என்றும் மனுஷ குமாரன் என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?

ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு தம்மை அடிக்கடி மனுஷ குமாரன் என்று அழைத்ததைப் பற்றி கவலைப்படவேண்டியது கிறிஸ்தவர்கள் அல்ல, நீங்கள் தான். காரணம் என்னவென்றால், அவரின் உண்மை இறைத்தன்மை அவ்வசனங்களிலேயே அல்லது அதைச் சுற்றியுள்ள வசனங்களிலேயே உள்ளதால், தவறான வசனங்களை மேற்க்கோள் காட்டிவிட்டோமே என்று கவலைப்படவேண்டியது, பீஜே அவர்களும் அவர் சொல்வதை சரிபார்க்காமல் தலையாட்டும் இஸ்லாமியரகளுமே. இதனை இககட்டுரையை முழுவதும் படித்த பிறகு புரிந்துக்கொள்வீர்கள்.

இனி பீஜே அவர்கள் தன் வாதத்திற்காக மேற்கோள் காட்டிய வசனங்களை கவனிப்போம்.

பீஜே அவர்கள் எழுதியவை

அதற்கு இயேசு, நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.(மத்தேயு 8:20)

ஈஸா குர்‍ஆன் பதில்:

அருமையான பீஜே அவர்களே, உங்களுக்கு "இந்த வசனத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் விவரம் என்ன கிடைத்தது?"

இந்த‌ வ‌ச‌ன‌த்தில் இயேசு "த‌ன்னுடைய‌ சீட‌ராக‌ மாறினால், ச‌ரியான‌ நேர‌த்தில் தூங்க‌வோ, சாப்பிட‌வோ.. அல்ல‌து இன்னும் இருக்கின்ற‌‌ சாதார‌ண‌ வ‌ச‌திக‌ளோ இழ‌க்க‌வேண்டி வ‌ரும்" என்ப‌தை விள‌க்க‌ கூறிய‌ வ‌ச‌ன‌மாகும். தன்னோடு எப்போதும் இருந்தால், இப்படிப்பட்ட வசதியில்லாத நிலையில் ஊழியம் செய்யவேண்டி வரும் என்பதை விளக்கினார்.

மத்தேயு 8:19ல் ஒருவர் வந்து கீழ்கண்டவாறு கூறுகிறார், அதற்கு பதிலாக இயேசு தருகிறார்.

அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

இயேசுவிற்கு சீடராக இருப்பது என்பது சுலபமல்ல, அதற்கு தியாகங்கள் செய்யவேண்டும், குறைந்தபட்ச வசதிகளும் சிலவேலைகளில் கிடைக்காது.

ஆக, பீஜே அவர்களே, இந்த வசனத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் எந்த விவரமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், இதே அதிகாரத்தை முழுவதுமாக படித்தால், இயேசு செய்த அனேக அற்புதங்களை காணமுடியும், தமது வார்த்தையினாலே பிசாசுக்களை துரத்தினார், கடல் கொந்தல்ப்பை அடக்கினார், குஷடரோகிகளை சுகமாக்கினார். எனவே, இந்த வசனத்தின் மூலமாக நீங்கள் எதையும் நிருபிக்கமுடியாது.

பீஜே அவர்கள் எழுதியவை

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ; என்றார். (மத்தேயு 9:6)

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள். (மத்தேயு 9:8)

ஈஸா குர்‍ஆன் பதில்:

1) மனுஷகுமாரனாகிய இயேசு உலக மக்களின் பாவங்களை மன்னிக்கிறவர்

பீஜே அவர்களே, "மனுஷ குமாரன்" என்ற வார்த்தைகளை இந்த வசனங்களில் பார்த்த நீங்கள், "பூமியிலே பாவங்களை மன்னிக்க அந்த மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டு" என்ற விவரத்தை இந்த வசனங்களில் கவனிக்க தவறியது ஏன்?

ஒரு மனிதன் மற்றவர்களின் பாவங்களை எப்படி மன்னிக்கமுடியும்?

ஒரு மனிதன் பாவங்களை மன்னிக்க அதிகாரம் தனக்கு உண்டு என்றுச் சொல்வது தேவ தூஷணம், இறைவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், இதனை நீங்கள் அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக, மனுஷ குமாரன் என்று தன்னை குறிப்பிட்டு, தனக்கு "பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்றுச் சொன்னது" அவரது தெய்வீகத் தன்மையை அது வெளிக்காட்டவில்லையா? இதனை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லையா? அல்லது புரிந்துக்கொண்டும் புரிந்துக்கொள்ளாதது போல நடிக்கிறீர்களா? இதனை யூதர்கள் புரிந்துக்கொண்டு, இவர் ஏன் இப்படி இறைவனுக்கு இருக்கவேண்டிய அதிகாரம் (பூமியிலே பாவங்களை மன்னிக்கின்ற உரிமை) தனக்கு உண்டு என்றுச் சொல்லி, இப்படி தேவதூஷணம் செய்கின்றார் என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள், அவர்களின் இந்த சிந்தனை "பொல்லாதவைகள்" என்று இயேசு சொல்லி, தனக்கு பாவங்களை மன்னிக்க உரிமை உண்டு என்றுச் சொல்கிறார்.

மத்தேயு 9:2-6 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

மத்தேயு 9:8ம் வசனத்தில் "மனுஷருக்கு" என்றுச் சொன்னது, மக்கள் கூறியதாகும், இயேசு கூறியது இல்லை. அவர்கள், இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இவ்விதமாக கூறினார்கள்.

ஆனால், மேலே கண்ட வசனங்களில், இயேசு தன்னை "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்ட வசனங்கள் அவரது தெய்வீகத் தன்மையை வெளிக்காட்டியது என்பதை மட்டும் யாரும் மறுக்கமுடியாது, ஏனென்றால், இறைவனைத் தவிர யார் உலக மக்களின் பாவங்களை மன்னிக்கமுடியும்? இவ்வசனத்தை மேற்க்கோள் காட்டி, இயேசுவின் இறைத்தன்மைகளில் ஒன்றாகிய பாவங்களை மன்னிக்கும் விவரத்தைப் பற்றி எழுத உதவிய பீஜே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இனி பீஜே அவர்களின் அடுத்த மேற்கோள் வசனத்திற்கு நம்முடைய கவனத்தை திருப்புவோம்.

பீஜே அவர்கள் எழுதியவை

பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். (மத்தேயு 16:13)

ஈஸா குர்‍ஆன் பதில்:

2) தேவகுமாரன் என்று அறிக்கையிடுபவன் பாக்கியவான்:

பீஜே அவர்களே, ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் மேற்கொள் காட்டிவிட்டு மற்றவற்றை விட்டுவிட்டால் எப்படி ஒரு நிகழ்ச்சி முழுமைப் பெறும். அதாவது நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில், தன்னை மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று இயேசு கேட்கிறார், அதற்கு சீடர்கள் சிலர் உம்மை எலியா, யோவான் ஸ்நானகன், எரேமியா தீர்கக்தரிசி என்று பலவிதங்களில் சொல்லிக்கொள்கிறார்கள் என்று சொன்னார்கள். அதன் பிறகு, இயேசு தம்முடைய சீடர்களிடம் நீங்கள் என்னை யார் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பேதுரு கீழ்கண்டவாறு பதில் சொன்னார்:

சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:16)

இயேசுவோடு உண்டு, உறங்கி, உரையாடி, அவரின் அனைத்து செயல்களையும் கண்ட பேதுரு "நீர் தேவனுடைய குமாரன் (இறைக்குமாரன்) அதாவது, கிறிஸ்து" என்று கூறுகிறார்.

இதனைக் கேட்டு, இயேசு அவர் மீது கோபம் கொண்டு:

நீ சொல்வது தவறு நான் "மனுஷ குமாரன் தான்" என்றுச் சொன்னாரா?

என்னை ஏன் இறைக்குமாரன் என்றுச் சொல்கிறாய்?

என்று கேள்வி கேட்டு கடிந்துக்கொண்டாரா?

இயேசு பேதுருவை கடிந்துக்கொள்ளவில்லை.

இயேசு பேதுருவை மெச்சிக்கொண்டார்,

நீ பாக்கியாவான் என்றுச் சொன்னார், மற்றும்

இந்த அறிவு அல்லது "இயேசு தான் தேவ குமாரனாகிய கிறிஸ்து என்ற அறிவு" பிதாவாகிய தேவன் வெளிப்படுத்திய அறிவு, உலக அறிவு அல்ல‌ என்றுச் சொன்னார்.

ஆக, இயேசு இறைக்குமாரனாகிய கிறிஸ்து என்று நம்புகின்ற அறிவு என்பது, தேவன் வெளிப்படுத்துகின்ற அறிவாகும், அப்படிப்பட்டவர்களை இயேசு "பாக்கியவான்" என்று மெச்சிக்கொள்கிறார்.


இதோ, பீஜே அவர்கள் காட்டிய ஒரு வசனத்தோடு சம்மந்தப்பட்ட அடுத்தடுத்த வசனங்களை படியுங்கள்:

மத்தேயு 16:13 -17 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

பீஜே அவர்கள் அறைகுறையாக வசனங்களை மேற்கோள் காட்டுகின்றார், முழுவதுமாக அடுத்தடுத்துள்ள வசனங்களை படித்து இருந்தால், இப்படி இந்த வசனத்தை காட்டியிருக்கமாட்டார். எந்த வசனத்தைக் காட்டி, இயேசுவின் இறைத்தன்மையை மறுக்க பீஜே அவர்கள் முயற்சி எடுத்தாரோ, அந்த அதிகாரத்தில், அவர் காட்டிய வசனத்தின் அடுத்த சில வசனங்களிலேயே, இயேசு இறைமகன் என்பது நிருபனமாகிவிட்டது.

இப்படி அறைகுறையாக விவரங்களைச் சொல்லி, வேண்டுமென்றே உண்மையை மறைத்து, கிறிஸ்தவர்களிடம் பீஜே கேட்கிறார்:

இயேசு தம்மை மனிதன் என்றும் மனுஷ குமாரன் என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?

இதனால் தான் நான் மேலே கூறினேன், கிறிஸ்தவர்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, நீங்கள் தான் உங்கள் புத்தகத்தை இனி மாற்றி எழுதவேண்டும், அல்லது திருத்த வேண்டும், அல்லது நீங்கள் திருந்த வேண்டும்.

ஆக, இயேசு தேவகுமாரன் என்றுச் சொல்லும் கிறிஸ்தவர்கள் பாக்கியவான்கள் என்றும், அவர்களின் இந்த அறிவு அல்லது அவர்கள் தெரிந்துக்கொண்ட இந்த சத்தியம் இறைவனிடமிருந்து வரும் வெளிப்பாடு என்றும் இயேசு கூறுகிறார். குறிப்பு: இயேசு இறைக்குமாரன் என்று அறிந்துக்கொள்கின்ற அறிவு, இறைவனிடமிருந்து வருமானால், பீஜே போன்றவர்கள் இயேசு மனிதன் மட்டுமே, அவர் நபி மட்டுமே என்றுச் சொல்லுகின்ற அறிவு யாரிடமிருந்து வந்திருக்கும்? இதற்கு பதில் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

ஆக, ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு அடம் பிடிப்பதை விட்டுவிட்டு, அதற்கு அடுத்தடுத்துள்ள வசனங்களையும் படித்து, முழு நிகழ்ச்சியையும் படித்து சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள் என்று பீஜே அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

பீஜே அவர்கள் எழுதியவை

மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்தேயு 16:27)

ஈஸா குர்‍ஆன் பதில்:

தமிழ் நாட்டின் சிறந்த இஸ்லாமியராகிய நீங்கள் (பீஜே) இந்த வசனத்தைக் காட்டியது, எனக்கு வேதனை அளிக்கிறது.

இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வளவு அறியாமையில் இருப்பார்களா?

நான் இப்படி எழுதுகிறேன் என்று கோபப்படவேண்டாம், ஏனென்றால், ஒரு சராசரி மனிதன் இந்த மேற்கண்ட வசனத்தை படிக்கும் போது, அவனுக்கு புரியும் அளவிற்கு கூட பீஜே அவர்களுக்கு புரியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை இப்படி எழுதவைக்கிறது. (அல்லது புரிந்தும் யார் நம்மை கேட்பார்கள் என்ற நினைப்பா?)

அப்படி என்னத்தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது? இதனை நாம் இப்போது பார்ப்போம், இவ்வசனத்தை இன்னொரு முறை படிப்போம்.

மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.(மத்தேயு 16:27)

இந்த வசனத்தில் "மனுஷ குமாரன்" என்ற வார்த்தை வருகின்றதே தவிர, அந்த மனுஷ குமாரன் என்ன செய்யப்போகிறார்? என்பதை பீஜே சிந்தித்து இருப்பாரா?

இந்த வசனத்தின்படி:

1) மனுஷ குமாரனாகிய இயேசு பிதாவின் மகிமையோடு வரப்போகிறார்

2) தம்முடைய தூதர்களோடு வருவார்

3) உலக மக்களின் (முஹம்மது மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரையும் சேர்த்து) செயல்களுக்கு ஏற்றப்டி பலன் அளிப்பார்.

இந்த வசனம் இயேசுவின் எதிர்கால வருகையைப் பற்றி மிகத்தெளிவாக கூறுகிறது. அவர் வானத்தில் தம்முடைய தூதர்களோடு வருவார் என்று கூறுகிறது, மற்றும் அவரவர் நடத்தைக்கு ஏற்ற பலனை தருவார் என்று கூறுகிறது.

இந்த வசனம் முழுக்க முழுக்க இயேசுவின் எதிர்கால வருகையைப் பற்றியும், அவரது இறைத்தன்மையைப் பற்றியும், கடைசிக் கால நியாயத்தீர்ப்பு பற்றியும் பேசுகின்றது, இந்த நியாயத்தீர்ப்பை தானே செய்வேன் என்றும் இயேசு கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் உங்களுக்கு விளங்கவில்லையா பீஜே அவர்களே!

ஒரு மனிதன் இப்படி சொல்லமுடியுமா?

ஒரு நபி (தீர்க்கதரிசி) இப்படி சொல்லமுடியுமா?

யார் இறைவனுக்கு நிகரான மகிமையோடு வருவார்கள்?

எந்த நபிக்கு சொந்தமாக தூதர்கள் இருந்தார்கள்?

பீஜே அவர்களே, உங்கள் மீது கிறிஸ்தவர்கள் பரிதாபங்கொள்கிறார்கள்.

கடைசி நாளில், நியாயத்தீர்ப்பு நாளில் எல்லா மனிதர்களும் அல்லாஹ்விற்கு முன்பாக நிற்கவேண்டும் அப்போது அவனவன் செய்த கிரியைக்கு தகுந்த பலனை அல்லாஹ் அளிப்பான் என்று கூறுவீர்களே.... அந்த அல்லாஹ்வின் ஸ்தானத்தில் தான் இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இதையா நீங்கள், இயேசுவின் மனித தன்மையை வெளிப்படுத்தும் வசனம் என்றுச் சொல்கிறீர்கள்? ஓ... பீஜே அவர்களே... உங்கள் மீது பரிதாபங்கொள்வதை விட்டு வேறு ஒன்றையும் செய்யமுடியாது....

இந்த வசனத்தில் சொல்லப்பட்ட சுருக்கத்தை விவரிக்கும் வகையில் புதிய ஏற்பாட்டில் அனேக வசனங்கள் உண்டு, அவைகளை இங்கு நான் தரமுடியும், இருந்தாலும் கட்டுரை மிகவும் நீண்டுவிடும் என்பதற்காக அவைகளை இங்கு தரவில்லை.

ஆக, நீங்கள் மேற்க்கோள் காட்டிய இந்த வசனம், உங்களுக்கு பிரயோஜனப்படவில்லை என்பதை அறிந்து வேதனை அடைகின்றோம்.

பீஜே அவர்கள் எழுதியவை

அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார். (மத்தேயு 17:22)

ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (மத்தேயு 17:12)

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 17:9)

ஈஸா குர்‍ஆன் பதில்:

4) மனுஷ குமாரன் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்:

பீஜே அவர்கள் காட்டிய இந்த மூன்று வசனங்களும் மத்தேயு 17ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, அவைகளை அவர் 22, 12, 9 என்ற வரிசையில் மேற்கோள் காட்டியுள்ளார், நாம் அதனை 9, 12, 22 என்ற வரிசையில் பார்க்கப்போகிறோம், ஏனென்றால், இந்த மூன்று வசனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பேசப்பட்ட வசனமாக இருப்பதால், இப்படி படிப்பது சரியாக இருக்கும்.

ஒரு முறை இயேசு தம்முடைய சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என்ற மூன்று சீடர்களோடு ஒரு மலையில் ஏறுகிறார், அங்கே தீர்க்கதரிசிகளாகிய மோசே மற்றும் எலியா காணப்படுகிறார்கள், இயேசுவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது, அவரது உடைகள் வெளிச்சத்தைப்போல வெண்மையாக இருந்தது (பார்க்க மத்தேயு 17:1-3). இந்த தரிசனத்திற்கு பிறகு அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள், அப்போது இயேசு அவர்களிடம் சொல்லும் வார்த்தைகள் தான், பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 17:9ம் வசனம்:

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 17:9)

பீஜே அவர்கள் மேற்கோள் காட்டியது போல, இந்த வசனம் இயேசுவின் மனிதத் தன்மையை வெளிப்படுத்தும் வசனமா? இல்லை, இது இஸ்லாமின் கோட்பாட்டில் மண்ணை அள்ளி வீசும் வசனமாகும், அதாவது, இந்த வசனத்தில் "தான் மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்திருப்பேன்" என்று எதிர்காலத்தில் இயேசு நிறைவேற்ற இருக்கும் சிலுவை மரணம்,மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி கூறுகிறார்.

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அவர் மரிக்கவில்லை, அவர் உயிரோடு மறுபடியும் எழவில்லை என்றுச் சொல்லும் குர்‍ஆனின் கோட்பாட்டை உடைத்தெறியும் வசனமாகும். இதனை மேற்கோள் காட்டி பீஜே அவர்கள் மிகப்பெரிய தவறை செய்துள்ளார்.

சரி, பீஜே அவர்கள் காட்டிய அடுத்த வசனம் 12ம் வசனமாகும். இப்படி இயேசு சொன்ன போது, அந்த சீடர்களும் யூதர்களாக இருந்தபடியினால், அவர்களுக்கு இருந்த அறிவின் படி, மேசியா வரவேண்டுமென்றால், முதலில் "எலியா" வரவேண்டுமே... என்று கேட்கின்றனர். அதாவது பழைய ஏற்பாட்டில் மேசியா வருவதற்கு முன்பு எலியாவைப்போன்று ஊழியம் செய்ய ஒரு தீர்க்கதரிசி வருவார், அவர் வந்து மேசியாவிற்கு வழியை சரிபடுத்துவார் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகையால், இந்த கேள்வியை கேட்டார்கள்.

இந்த கேள்விக்கு பதிலாக இயேசு கூறிய வசனம் தான் பீஜே அவர்கள் காட்டிய வசனம் 17:12:

ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். (மத்தேயு 17:12)

இந்த வசனத்திலும் இயேசு தாம் யூதர்களால் துன்புறுத்தப்படுவார் என்பதை கூறுகிறார், இவைகள் அனைத்தும் தமது சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் சம்மந்தப்பட்ட உரையாடலே. இதுவும் குர்‍ஆன் சொல்வதற்கு எதிராக உள்ளது, சிலுவைக்கு முன்பாக நடக்கவிருக்கும் துன்புறுத்தலைக் குறித்து இயேசு கூறுகிறார்.

இப்போது அதே அதிகாரம் 22ம் வசனத்தை நாம் பார்ப்போம். இந்த வசனத்தை பீஜே அவர்கள் முதலாவது குறிப்பிட்டு இருந்தார்கள், நான் ஏன் கடைசியாக குறிப்பிட்டேன் என்பது இப்போது விளக்குகிறேன்.

மத்தேயு 17:22 அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

இந்த வசனமும் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கவில்லை, இது மறுபடியும் இயேசுவின் பாடுகளைக் குறித்து பேசுகின்றது.

மத்தேயு 17:22ம் வசனத்தை மட்டும் காட்டி, இது மனிதத் தன்மையை வெளிப்படுத்துகிறது என்றுச் சொன்ன பீஜே அவர்களின் முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது. மட்டுமல்ல, அடுத்த ஒரு வசனம் பீஜே அவர்கள் படித்து இருக்கவேண்டும், அதனை அவர் படிக்க மறந்து இருக்கலாம், ஆகையால், அதனை இப்போது அவருக்கு படிக்க நாம் இடம் கொடுப்போம்.

மத்தேயு 17:23 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

அந்த மனுஷ குமாரன் கொலை செய்யப்படுவார், அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்.இந்த உயிர்த்தெழுதல் தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. யார் அவர்? அவர் தான் இயேசுக் கிறிஸ்து.

மனுஷ குமாரன் என்ற வார்த்தை இருந்தாலே போதும், அதன் பிறகு என்ன வருகிறது... அதன் அர்த்தம் என்ன? இதனை நாம் மேற்கோள் காட்டினால் சரியாக இருக்குமா? போன்றவைகளை பீஜே அவர்கள் சிந்தித்தாரா?

ஆக, இஸ்லாமுக்கு எதிராக உள்ள இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், மற்றும் உயிர்த்தெழுதல், இவைகள் அனைத்தும் இயேசு முன்னறிவித்தது போலவே நடந்துள்ளது, அவரே மேசியாவாகிய இயேசு. பீஜே அவர்களே... இந்த முறையும் முயற்சி தோல்வி தான். மனுஷ குமாரன் என்ற வார்த்தை வந்த வசனங்களை சிந்திக்காமல் மேற்கோள் காட்டுவது ஆபத்து, அறிவீனம்.

பீஜே அவர்கள் எழுதியவை

அதற்கு இயேசு, மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

ஈஸா குர்‍ஆன் பதில்:

5) மனுஷக் குமாரனே நியாயாதிபதி (நீதிபதி)

இந்த வசனத்தைக் கண்டவுடன், என் உள்ளம் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் என்றுச் சொல்கிறது. ஏனென்றால், பீஜே அவர்கள் இந்த வசனத்தையுமா மேற்கோள் காட்டவேண்டும்? பழம் நழுவி பாலில் விழுந்தது போல் அல்லவா உள்ளது!

நியாயத்தீர்ப்பு நாளிலே இயேசு தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பாராம், அவரது சீடர்கள் 12 பேரும், 12 சிங்காசனத்தில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை நியாயந்தீர்ப்பார்களாம்.

யாரய்யா இந்த அதிகாரத்தை சீடர்களுக்கு தருவேன் என்றுச் சொல்வது? மனுஷ குமாரனா? ஒரு சாதாரண மனிதனா? ஒரு நபியா? யார் அவ‌ர்?

அவர் தான் இயேசுக் கிறிஸ்து, ம‌னுஷ‌ குமார‌னாகிய‌ கிறிஸ்து.

ஒரு ம‌னித‌த் த‌ன்மையுள்ள‌ ஒருவ‌ர் இப்ப‌டி சொல்ல‌முடியுமா? அப்ப‌டி சொன்னால் அது தெய்வ‌க் குற்றமாகாதா?

பீஜே அவர்களே வெறும் "மனுஷ குமாரன்" என்ற வார்த்தையை மட்டும் பார்க்கவேண்டாம், அவர் என்ன செய்வேன் என்றுச் சொல்கிறார் என்பதை பார்க்கவும்.

நானே நீதிபதி, உங்கள் கிரியைக்கு ஏற்ற பலனை தருவேன் என்று இயேசு கூறுகிறார்.

உங்கள் முஹம்மது அவர் செய்த செயல்களுக்கு ஏற்ற பலனை, இயேசுவின் சிங்காசனத்தின் முன்பு நின்று நியாயந்தீர்க்கப்பட்டு பெற்றுக்கொள்ளவேண்டும்.

மக்கள் நியாயந்தீர்க்கப்படும் நாளில் என்ன நடக்கும், யார் இதனை செய்வார்கள் என்று இயேசு கூறுகிறார், மட்டுமல்ல,தன் சீடர்களுக்கு அதிகாரத்தையும் கொடுப்பதாகக் கூறுகிறார்.

ஆக, இந்த மேற்கோளும் உங்களுக்கு உபயோகப்படவில்லை. ஆகையால் தான் சொல்கிறேன், ஓ இஸ்லாமியர்களே இயேசுவின் இறைத்தன்மையை மறுக்க பைபிளை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள், அது உங்களால் முடியாது.

பீஜே அவர்கள் எழுதியவை

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து... (மத்தேயு 20:18)

ஈஸா குர்‍ஆன் பதில்:

ஏன் பீஜே அவர்களே, 18ம் வசனத்தோடு நிறுத்திக்கொண்டீர்கள்... அப்படியே 19ம் வசனத்தையும் மேற்கோள் காட்டியிருக்கலாமே....

சரி, நான் 18 மற்றும் 19ம் வசனங்களை ஒன்றாக பதிக்கிறேன், நீங்கள் படித்துக்கொள்ளுங்கள்.

மத்தேயு 20:18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,

மத்தேயு 20:19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

ஓகோ... 19ம் வசனத்தையும் மேற்கோள் காட்டியிருந்தால், அந்த மனுஷகுமாரன் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பேன் என்றுச் சொன்ன விவரம் வந்துவிடுமோ என்று பயந்தீர்களோ...

அதிக ஜாக்கிரையாகத்தான் எழுதுகிறீர்கள், ஆனால், பிரயோஜனமில்லை பீஜே அவர்களே, நீங்கள் சொன்ன அந்த மனுஷ குமாரன் மூன்றாம் நாளில் எழுந்திருப்பாராம்... அப்படியே எழுந்தாரும் கூட....

பீஜே அவர்கள் எழுதியவை

அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும் படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)

ஈஸா குர்‍ஆன் பதில்:

6) இந்த மனுஷ குமாரன் மீட்பர் , இரட்சகர். அனேகரை மீட்க தம் உயிரை தருபவர்:

இனியும், நீண்ட பத்திகளை எழுத நான் விரும்பவில்லை. நீங்கள் மனிதன் என்று நிருபிக்க விரும்பிய அந்த மனுஷ குமாரன், அனேகரை மீட்க தம் உயிரை தருகின்றாராம். இவரைத் தான் நாங்கள் மீட்பர் என்கின்றோம், இரட்சகர் என்கின்றோம். நீங்கள் காட்டிய இந்த வசனம் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாக இருக்கிறது, உலகத்தை மீட்க விண்ணுலகை விட்டு வந்தார், தன் உயிரைக் கொடுத்து உங்களையும் என்னையும் மீட்டுக்கொண்டார். இந்த வசனத்தையும் காட்டி, மீட்பின் செய்தியை இன்னொரு முறை படிக்க உதவிய பீஜே அவர்களுக்கு என் நன்றிகள்.

நீங்கள் எந்த வசனத்தை மேற்க்கோள் காட்டினாலும், அங்கு கிறிஸ்து வந்துவிடுகின்றார், மீட்பர் வந்துவிடுகின்றார், இரட்சகர் வந்துவிடுகின்றார், நித்திய நியாயாதிபதி வந்துவிடுகின்றார், பாவங்களை மன்னிக்கின்றவர் வந்துவிடுகின்றார்.... என்ன செய்வது... இயேசு இறைமகன் தான் என்று உங்கள் புத்தகத்தின் பெயரை மாற்றிவிடவேண்டியது தான்.

பீஜே அவர்கள் எழுதியவை

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும். (மத்தேயு 24:27)

ஈஸா குர்‍ஆன் பதில்:

7) மனுஷ குமாரனின் பிரகாசமான வருகை:

அடேங்கப்பா! அருமை அருமை... இந்த வசனத்தையுமா நீங்கள் இயேசு மனிதன் என்பதை நிருபிக்க மேற்கோள் காட்டுகிறீரகள்... உங்களின் ஆய்விற்கு ஆயிரம் சலாம்கள் சொல்லலாம்.

இந்த மனுஷ குமாரன் சொல்கிறார், தான் வரும் போது, மின்னல் ஒரு திசையிலிருந்து மறுதிசை வரையில் பிரகாசிக்கிறது போல, அவர் வருவாராம்.

உங்களுக்கு தெரிந்த எந்த மனிதராவது இப்படி சொல்லமுடியுமா?

இப்படி உலகமனைத்தும் காணும்படி வருவேன் என்றுச் சொன்ன இயேசுவா உங்களுக்கு மனிதனாக தெரிகின்றார்.

இந்த வசனம் அவரது தெய்வீகத் தன்மையையும், அவரது வருகையையும் காட்டுகின்றதே தவிர, அவரது மனிதத் தன்மையை காட்டவில்லை.

இயேசு முதல்முறை உலகத்தில் வந்த போது, ஒரு சிறிய கிராமத்தில், எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியா உதித்தார். ஆனால் அவரது அடுத்த வருகை இப்படி இருக்காது எனபதையும், அதே நேரத்தில், இயேசு இங்கு இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால் நம்பவேண்டாம், நான் முதல் முறை வந்த வண்ணமாக அல்ல, இந்த முறை மின்னலைப்போல பிரகாசமாக வருவேன் என்பதைச் சொன்னார்.

பீஜே அவர்களே, நீங்கள் காட்டிய 27ம் வசனத்தின் முன்பாக உள்ள வசனத்தை சிறிது பாருங்கள்:

மத்தேயு 24:25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

மத்தேயு 24:26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

மத்தேயு 24:27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

இன்னும் அதிக விவரத்தை இயேசு கூறுகின்றார், இயேசு இறைவன் அல்ல, மனிதன் மட்டுமே என்றுச் சொல்லி, சம்மந்தேமே இல்லாத வசனங்களை இன்னும் சொல்லப்போனால், தான் சொல்லவந்த செய்திக்கு நேர் எதிராக உள்ள வசனங்களைக் காட்டிய பீஜே அவர்களே, கடைசி காலங்களில் இந்த மனுஷ குமாரன், நீங்கள் மேற்கோள் காட்டிய மனுஷ குமாரன் எப்படி வருவார் என்பதை, நீங்கள் காட்டிய வசனத்தின் அடுத்த சில வசனங்களிலேயே கூறியுள்ளார், இவைகளையும் ஒரு முறை படித்துப்பாருங்கள். முப்பதாம் வசனத்திலும் "மனுஷ குமாரன்" என்ற சொற்றொடர் வருவதை கண்டீர்களா, பீஜே அவர்களே!

மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

மத்தேயு 24:30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

மத்தேயு 24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.

மேற்கண்ட வசனங்கள் பற்றி இன்னும் விவரிக்கவேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியவை

மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். (மத்தேயு 26:24)

ஈஸா குர்‍ஆன் பதில்:

8) தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தபடியே மனுஷ குமாரன் போகிறார்:

மனுஷ குமாரன் என்ற சொற்கள் வருகின்றதா, உடனே அதனை மேற்கோளாக காட்டிவிட்டால் போதும் என்று நினைத்து, இயேசு இறைமகனா என்ற புத்தகத்தை எழுதிய பீஜே அவர்களே, இந்த வசனத்தையும் மேற்கோளாக காட்டி நீங்கள் தவறு இழைத்துவிட்டீர்களே!

இதில் என்ன இறைத்தன்மை வெளிப்படுகின்றது என்று கேட்கிறீர்களா?

இயேசு இங்கு "தன்னைப் பற்றி எழுதியிருக்கின்றபடியே" அல்லது மஸீஹாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் படியே தான் போகிறார் என்று கூறுகின்றார்.

இயேசுவைப் பற்றி அனேக தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் உண்டு, அவைகளின் படியே அவர் தன் மீட்பின் வேலையை முடித்துவிட்டு செல்கின்றார் என்று இயேசு இங்கு கூறுகின்றார்.

ஆக, இந்த வசனமும் மேசியாவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலைக் காட்டுகின்றது.

இயேசு மனுஷனாக இருந்தால் அவரைப் பற்றி ஏன் பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கவேண்டும்? அவர் மனுஷனல்ல, மனுஷனாக வந்த இறைவன்.

பீஜே அவர்கள் எழுதியவை

அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 26:64)

ஈஸா குர்‍ஆன் பதில்:

9) மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பக்கத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பார்:

இந்த வசனத்தைக் காட்டி, இன்னும் அதிகமான பாதிப்பை தனக்குத்தானே பீஜே உண்டாக்கிக்கொண்டார்.

இவ்வசனத்தின்படி, மனுஷ குமாரன்:

1) வானங்களின் மேல் வருவார்

2) தேவனின் வலது பாரிசத்தில் உட்காருவார்.

ஆம, இறைவனுக்கு சமமாக இவர் உட்காருவார், நாம் இக்கட்டுரையில் பல வசனங்களில் பார்த்தது போல அவர் மேகங்கள் மேல் வருவார், மின்னலின் பிரகாசம் போல வருவார்.

இந்த வசனத்தில் எந்த செயலை வைத்துக்கொண்டு, நீங்கள் இது மனுஷ தன்மையை காட்டுகின்றது அவர் இறைவன் அல்ல என்று சொல்ல வருகிறீர்கள் பீஜே அவர்களே?

இயேசு தேவனுக்கு (முஸ்லீம்களுக்கு புரியவேண்டுமென்றால் அல்லாஹ்விற்கு) சமமாக உட்காருவார், மேகங்கள் மேல் வருவார்.

இது ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளா?

இந்த வசத்தில் இன்னொரு முக்கியமான ஒரு விஷயத்தையும் இயேசு கூறியுள்ளார், அதாவது "இயேசு இறைமகனா?" என்ற கேள்வியை கேட்கும் பீஜே அவர்களுக்கு பதிலாக," நான் இறைமகன் தான்" என்பதை இயேசு இந்த வசனத்தில் கூறியுள்ளார். எங்கே காட்டு என்று என்னிடம் சொல்வீர்களானால், இந்த வசனத்தின் முந்தைய வசனத்தை சிறிது படித்துப்பாருங்கள், அதில் நீ தேவகுமாரனா (இறைமகனா) என்ற கேள்வி கேட்கப்படுகின்றது, இயேசு ஆம், நீங்கள் சொல்லுகின்றபடி, நான் தேவகுமாரன் தான் என்றுச் சொல்கிறார்.

பீஜே அவர்கள் காட்டிய வசனத்திற்கு முன்பாக பின்பாக உள்ள ஒவ்வொரு வசனத்தை இப்போது சேர்த்து படிப்போம்.

மத்தேயு 26:63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

மத்தேயு 26:64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26:65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

இயேசு, "தான் இறைமகன்" என்றுச் சொல்லி, இறைவனுக்கு நிகராக "தான் சிங்காசனத்தில் உட்காருவேன்" என்றுச் சொன்னதைக் கேட்ட, பிரதான ஆசாரியன், தன் உடைகளை கிழித்துக்கொண்டு, "இதோ இவன் தேவதூஷணம்" சொல்கின்றானே என்று குதிக்கிறார். தேவதூஷணம் என்றால் என்ன என்று பீஜே அவர்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

இயேசுவின் இறைத் தன்மையை பைபிளைக்கொண்டு உம்மால் (உங்கள் அல்லாஹ்வாலும்) முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீஜே அவர்கள் எழுதியவை

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார். (மத்தேயு 26:45)

ஈஸா குர்‍ஆன் பதில்:

இந்த வசனத்திலும், தன் வேளை வந்தது, தான் சொன்னது போல, பாடுபட்டு சிலுவையில் அறையப்பட தான் தயார் என்பதை இயேசு இங்கு கூறுகின்றார். அவர் சொன்னது போலவே, எல்லாம் நடந்துள்ளது. யூதர்கள் சிப்பாய்களோடு வருகிறார்கள், பிடிக்கிறார்கள் துன்பப்படுத்தி சிலுவையில் அறைகிறார்கள். நான் "இருக்கிறேன்" என்றுச் சொன்னவர் கல்லரையில் அப்படியே இருந்துவிடுவாரா.. மூன்றாம் நாள் எழுந்தார்... இனியும் வரப்போகிறார்.

பீஜே அவர்களே, ஒரு வசனத்தில் "மனுஷ குமாரன்" என்ற வார்த்தைகள் வந்தால் போதும், வேறு ஒன்றும் கவனிக்கவேண்டியதில்லை என்ற நினைப்பில், "அந்த மனுஷகுமாரன்" என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்காமல், வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். இது உங்கள் அறியாமையைக் காட்டுகின்றது. உங்களுக்காக நான் பரிதாப்படுகின்றேன்..

பீஜே அவர்கள் எழுதியவை

மேற்கண்ட இடங்களில் இயேசு தம்மை மனுஷ குமாரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்ற, கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?

ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு தன்னை மனுஷ குமாரன் என்று ஏன் குறிப்பிட்டுக்கொண்டார் என்பதை என் அடுத்த பதிலில், இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன், அதே போல, நீங்கள் நினைப்பது போல, "தேவகுமாரன்" என்றால், தேவன் மனுஷன் குழந்தை பெறுவதுபோல பெற்றார் என்று பொருள் அல்ல. இதனை விளக்க, "இயேசுவை இறைவன், என் நேச குமாரன் என்று அழைத்தால், அவர் இறைவன் ஆகிவிடமுடியுமா?" என்ற உங்களின் விவரங்களுக்கு நான் எழுதப்போகும் அடுத்த மறுப்பு கட்டுரையில் விளக்குகிறேன்.

இயேசு மனுஷ குமாரன் என்று அழைத்துக்கொண்டார், ஆனால் அதே வசனங்களில் அவர் செய்வேன் என்றுச் சொன்ன விவரங்கள் ஒரு மனித தன்மைக்கு உட்பட்டு இருக்கின்றதா என்பதை சிறிது கவனித்துப்பாருங்கள். இயேசுவின் இறைத்தன்மையை வெளிக்காட்டுவதற்கு நீங்கள் காட்டிய வசனங்களே போதுமானது.

பீஜே அவர்கள் எழுதியவை

நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

ஈஸா குர்‍ஆன் பதில்:

பீஜே அவர்களே, உங்களின் இந்த வரிகள் பச்ச பொய்... ஆகும்.

இதுவரை பீஜே அவர்கள் காட்டிய அனைத்து வசனங்களில் உள்ள இயேசுவின் இறைத்தன்மையை நான் விவரித்தேன். இவ்வசனங்களில் இயேசுவின் இறைத்தன்மை தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதை மறுப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதலாம்.

இவ்வசனங்களில் சொல்லப்பட்ட செய்திகள், இறைத்தன்மைய வெளிக்காட்டுகின்றது என்பதை ஒரு சாதாரண மனிதன் கூட இந்த கட்டுரையை படித்தால் சுலபமாக புரிந்துக்கொள்வான்.

பீஜே அவர்கள் காட்டிய வசனங்களில் தெளிவாக இறைத்தன்மை வெளிப்பட்ட விவரத்தை நான் தலைப்பு கொடுத்துள்ளேன். அவைகளை இங்கு சுருக்கமாக தருகிறேன்.

1) மனுஷகுமாரனாகிய இயேசு உலக மக்களின் பாவங்களை மன்னிக்கிறவர்

2) தேவகுமாரன் என்று அறிக்கையிடுபவன் பாக்கியவான்:

3.1) மனுஷ குமாரனாகிய இயேசு பிதாவின் மகிமையோடு வரப்போகிறார்

3.2) தம்முடைய தூதர்களோடு வருவார்

3.3) உலக மக்களின் (முஹம்மது மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரையும் சேர்த்து) செயல்களுக்கு தகுந்த‌ பலன் அளிப்பார்.

4) மனுஷ குமாரன் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்:

5) மனுஷக் குமாரனே நியாயாதிபதி (நீதிபதி)

6) இந்த மனுஷ குமாரன் மீட்பர் , இரட்சகர். அனேகரை மீட்க தம் உயிரை தருபவர்:

7) மனுஷ குமாரனின் பிரகாசமான வருகை:

8) தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்தபடியே மனுஷ குமாரன் போகிறார்:

9) மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பக்கத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பார்:

பீஜே அவர்கள் காட்டிய வசனங்களின் படி, இயேசு மீட்பர், இரட்சகர், பாவங்களை மன்னிப்பவர், நியாயந்தீர்ப்பவர், மேகங்கள் மேல் வருபவர், மின்னலின் பிரகாசம் போல வருகின்றவர், தேவனின் வலது பாரிசத்தில் சிங்காசனத்தில் உட்காருபவர், தீர்க்கதரிசனங்களின் படி வந்து மீட்பின் வேலையை முடித்தவர்.

இந்த குணங்கள் ஒரு மனுதனுக்கு இருக்குமா? சிந்தியுங்கள் பீஜே அவர்களே சிந்தியுங்கள்.

பீஜே அவர்கள் எழுதியவை

இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.

ஈஸா குர்‍ஆன் பதில்:

மேற்கண்ட பைபிள் வசனங்களை எந்த கிறிஸ்தவரும் நிராகரிக்கமாட்டார் காரணம், அவைகள் இயேசுவின் இறைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது. அடடே, நான் ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டேனே, இந்த வசனங்களை மேற்கோள் காட்டிவிட்டேனே என்று உங்களை நீங்களே நொந்துக்கொள்ளவேண்மே ஒழிய, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

பீஜே அவர்கள் எழுதியவை

இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர் என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும். கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?

இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவன் என்று புரிந்து கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவை வழிபடுகின்றவர்கள் கூட இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது. அவர்களே இறை மக்களாக - அதாவது இறைவனாக - இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா? இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது.
 
All formats are mine.
ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசுவை இறைமகன் என்று அழைப்பதற்கும், மற்றவர்களை அப்படி அழைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை, உங்களுக்கு இயேசு இறைமகனா? என்ற தலைப்பில் பதில் அளிக்கும் போது விவரிப்பேன்.

முடிவுரை:

இதுவரை பீஜே அவர்களின் வரிகளுக்கு நாம் பதிலைக் கண்டோம். இதற்கு பீஜே அவர்கள் மறுப்பு தெரிப்பதாக இருந்தால், தெரிவிக்கட்டும், பதில் எழுதட்டும்.

இயேசுவிற்கு தாவீதின் குமாரன், இறைக்குமாரன், ஆபிரகாமின் குமாரன், என்றும் இன்னும் அனேக பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் போது, தன்னை அவர் பல முறை ஏன் "மனுஷ குமாரன்" என்று கூறினார்? இதன் பொருள் என்ன? மனுஷ குமாரன் என்ற சொல் ஒரு இரகசிய வார்த்தையா? போன்ற விவரங்களை இதன் இரண்டாம் பாகத்தில் விவரிக்கிறேன்.

அவர் தன்னை மனுஷ குமாரன் என்றுச் சொன்ன ஒவ்வொரு இடத்திலும், தன் தெய்வீகத்தன்மைய வெளிப்படுத்தினார் என்பதை பீஜே அவர்களின் வசனங்களிலிருந்தே பார்த்தோம்.

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: பீஜே அவர்கள் கிறிஸ்தவம் பற்றி எதை எழுதினாலும், பேசினாலும், அவர் எழுதியதை கூர்ந்து கவனித்து, சத்தியத்தோடு சரிபார்த்தால் போதும், அவர் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் என்பது தெளிவாக விளங்கிவிடும். சாதாரண சராசரி கிறிஸ்தவனே சுலபமாக‌ பதில் அளிக்கும் அளவிற்கு அவரது மேற்கோள்கள் இருக்கின்றது என்பதை இக்கட்டுரை தெளிவாக்குகிறது.

அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரையில்,

உங்கள் சகோதரன்

உமர்
 
 


--
5/05/2010 11:01:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்