நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
ஆசிரியர்: ராய் அக்ஸ்னவத்
By Roy Oksnevad
நற்பண்புமிக்க வாழ்வினை வாழ முயல்வது ஓர் முடிவற்ற சோர்வுமிக்க பணியாகும். இப்பணியில் நமது தவறான போக்குகளை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பாடுபட வேண்டியுள்ளது.அதே சமயத்தில் நற்செயல்களைச் செய்யவும் வேண்டியுள்ளது. இது நம் முழு கவனத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கிறது. மேலும் நாம் ஒரு நடுநிலையான உலகில் வசிக்கவில்லை. இவ்வுலகில் நமக்கு ஆர்வத்தைத் தூண்டும் காரியங்களும்,தேவைகளும், பரபரப்புகளும் உண்டு. இவை நம்மில் மிஞ்சும் சக்தியையும் உறிஞ்சி நாம் அறிந்தவரை உள்ள நல்வாழ்க்கையினையும் வாழ முடியாதபடி செய்து விடுகின்றன. நமது இப்போராட்டத்தினை தேவன் அறிவாரா? நமது பலவீனத்தை அவர் கவனியாமல் இருப்பாரா? அல்லது அவர் நாம் நல்லது எனக்கருதும் செயல்களைச் செய்யும் ஆற்றலுடன் கூடிய ஒரு வித்தியாசனமான வாழ்க்கையினை வாழும் அனுபவத்தை பெற வேண்டும் என விரும்புகிறாரா?
படைப்பு (CREATION):
தேவன் மனுக்குலத்தை பழுதோ பலவீனமோ இல்லாதவர்களாக படைத்தார். உலகின் முதல் மனுஷனும் மனுஷியுமான ஆதாமும் ஏவாளும் ஒழுங்காகவும் முழுமையாகவும் படைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நல்லவர்களாகவும் சரியானவைகளையே செய்ய விரும்புபவர்களாயும் இருந்தனர். ஏனெனில் நற்பண்பு என்னும் அடிப்படைஉணர்வு அவர்களில் வாசம் செய்தது. அவர்களிடம் கெட்ட அல்லது தீய எண்ணங்கள் சிறிதளவும் இல்லை. உண்மையில் தேவனே மனிதனை படைத்தபின் தனது படைப்பினை நல்லது எனக்கண்டதாக பைபிள் கூறுகிறது. நற்பண்பு மனிதருக்கு ஜீவனையும் வாழும் வழியையும் கொடுத்தது.
பின் ஏன் நாம் தேவன் படைத்தவண்ணமாகவே இல்லை?
வீழ்ச்சி (FALL):
ஆதாமின் நாள் முதற்கொண்டு பகைவனான சாத்தான் தேவன் உருவாக்கியதை அழிப்பதிலேயே குறியாக இருந்தான்.அவன் ஆதாமையும் ஏவாளையும் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியாதிருக்குமாறு தூண்டினான். அவர்கள் அந்த தூண்டுதலுக்கு பலியானார்கள். மனிதன் தேவனுக்கு கீழ்படியாமல் போகும்போது இரண்டு காரியங்கள் நடைபெற்றன. முதலாவது தீமை அவர்களுள் நுழைந்தது. அது முதல் ஒவ்வொருவரும் தம்முள் வசிக்கும் கெட்ட தீமையுடன் போராடவேண்டியதானது. இந்த விரும்பத்தகாத பண்பு தேவனின் படைப்பின் திட்டத்தின் ஒரு பங்கு அல்ல. இரண்டாவது தேவனுக்கு கீழ்படியாது இருக்கும்போது மனிதரின் உள்ளான நற்பண்புகள் செத்துவிடுகின்றன. நல்லவை எவை என நாம் புரிந்து கொள்கிறோம், ஆனால், நல்லவைகளுக்கு தமக்கே உரித்தான உயிர் இல்லை. உண்மையில் நல்லன செய்வதிலும் தீயவற்றை செய்யாது விலகியிருப்பதிலும் நமது சக்தி முழுவதையும் வெளியிட(செலவிட)வேண்டியுள்ளது. நாம் சோர்ந்துபோய் இருக்கும்போதோ அல்லது பிறர் நமக்கெதிராக எழும்போதோ நம்மில் உள்ள தீமைகள் நல்லனவற்றை மேற்கொள்ளுகின்றன. நல்லனவற்றை நடப்பிப்பதற்கு நமது முழு முயற்சியும் தேவை படுகின்றது.
உதாரணமாக, ஒரு கணவன் தனது மனைவியிடம் எவ்விதம் நடந்துக்கொள்ளவேண்டும் என புரிந்துக்கொண்டுள்ளான். அவளிடம் அன்பு காட்டி அவளை நன் முறையில் நடத்தவேண்டும் என அவனுக்குத் தெரியும். ஆயினும் அவனுக்குத் தெரிந்த நல்லவற்றை அவன் செய்யத்தவறுகிறான். இவ்வாறே பெற்றோரும் தமது பிள்ளைகளுடன் உணர்வுடனும் புரிந்துகொள்ளுதலுடனும் பழக முயல்கின்றனர். ஆனாலும் ஒருவருக்குள் ஒருவர் இருக்கும் இவ்வுறவில் அவர்களுக்குள் இருக்கும் தீமை உணர்வு வெளிவந்து விடுகின்றது. பிள்ளைகளும் கூட தீய காரியங்களை செய்ய கற்றுக்கொள்ள வேண்டுவதில்லை.நாம் தொடர்ச்சியாக அவர்களுக்கு கற்றுக்கொடுத்து நற்பண்புகளுடன் இருக்க அவர்களை சீர்படுத்திக்கொள்ளலாம். நமது கடும் முயற்சியிலும் கூட அவர்கள் தவறான காரியங்களை செய்யவே விரும்புகிறார்கள் தவிர நல்லவற்றை கற்றுக்கொள்வதில் தாமதமாகவே உள்ளனர்.
நம்மில் உள்ள தீயஉணர்வை கட்டுப்பாட்டில் கொண்டுவர நாம் என்ன செய்ய வேண்டும்? நம்மில் உள்ள நற்பண்பிற்கு உயிரூட்டுவது எவ்வாறு?
வாழ்வினை புத்துயிர் பெறச்செய்யும் முயற்சிகள் (ATTEMPTS TO RESTORE LIFE):
நம் வாழ்வில் நல்லவற்றை புத்துயிர் பெறச்செய்ய பற்பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அறிவுப்பெருக்கம்(Knowledge) இதற்கு ஓர் வழி எனச்சிலர் கூறுகின்றனர். மக்களை அதிகம் அறிவுறுத்தும் போது அவர்கள் அதிகமாக நல்லனவற்றை பெறும்படி மாறுகின்றனர். ஆனால் இதற்கு மாறாக இந்த அறிவுப்பெருக்கத்தையும் அதனால் வந்த அறிவையும் அவர்கள் தங்கள் வழிகளைத் தஙகளின் விருப்பப்படி மாற்றி அமைத்துக்கொள்ளவே பயன்படுத்துகிறார்கள் அல்லது மக்களை ஏமாற்றுகிறார்கள். அறிவுப்பெருக்கம் வாழ்க்கைக்கு நல்லனவற்றை கொண்டுவராது.
சிலர் நல்லொழுக்கம்(Discipline) தான் இதற்கு தீர்வு எனச்சொல்கின்றனர். நாம் அதிக ஒழுங்கினை கைக்கொள்ளும் போது நமது எண்ணம், செயல்,செயல்பாடுகள் அனைத்தும் முன்னேறி நல்வகைப்படும். எனினும் நமக்கு மிக அருகாமையில் உள்ளவர்கள் நாம் உண்மையாகவே எத்தகையவர்கள் என்பதினை அறிவார்கள். சுயஒழுங்கின் மூலம் நாம் நமக்குள்ளேயே ஓர் உலகினை உருவக்கிக்கொள்ளலாம், எனினும் நாம் இவ்வுலகில் தான் வசிக்கிறோம். இவையெல்லாம் நமக்குள் உள்ள நல்லனவற்றை வெளிக்கொணர பயன்படாது.
மதம்(Religion) இதற்கு மற்றுமொரு தெரிவாக(Option) உள்ளது. நாம் ஆலயத்திற்கோ, மசூதிக்கோ அல்லது ஒரு சபைக்கோ செல்வதினாலோ அல்லது புதிய ஓர் மத நம்பிக்கைக்குள்ளாக ஆட்படுவதினாலோ நாம் நன்மக்களாக மாறலாம். ஆனால் துரதிஷ்டவசமாக மதத்தினால் நாம் பெறும் பயன், இவ்வுலகைப் பற்றிய ஓர் புதிய பார்வையே தவிர நமக்குள் மலரும் ஓர் புத்துயிர் அல்ல.
இறுதியாக சட்டம்(Law) தான் நாம் நல்வகைப்பட சிறந்த வழி எனச்சிலர் கூறுகின்றனர். நமது நடத்தையை சீர்படுத்தும் சட்டங்கள் இருக்குமானால் நாம் நன்மக்களாக நல்குடிமக்களாக இருப்போம். ஆயினும் அதிகமான சட்டதிட்டங்கள் அடக்குமுறையையே வளர்க்குமேயொழிய நல்லன செய்ய நம்மை ஊக்குவிக்காது. சட்டத்தில் உள்ள விடுதல்களை(Exceptions) கண்டுபிடித்து அதன் மூலம் நம் இஷ்டப்படி நமது நடத்தையை நியாயப்படுத்திடுதல் மனித இயல்பு. நம்மில் உள்ள நல்லனவற்றை புத்துயிரூட்ட சட்டம் பயன்படாது.
அறிவு, ஒழுக்கம், மதம் மற்றும் சட்டம் இவைகளால் நம் வாழ்க்கைக்கு ஓரளவிற்கு நன்மை விளையலாம். இவை அனைத்தும் நம் தீய நடத்தையை மட்டுப்படுத்த மட்டுமே பயன்படுமே தவிர நம்முள் இருக்கும் நற்பண்பிற்கு புத்துயிரூட்ட பயன்படாது. இவை வெளியரங்கமான தாக்கம் மட்டுமே. நம்முள் இருக்கும் தீய எண்ணங்களை நாம் கட்டுக்குள் வைத்திருப்பதில் நாம் முனைப்பாய் இல்லாவிட்டால் அவற்றின் ஆளுகைக்கு மறுபடியும் நாம் ஆட்பட்டுவிடுவோம்.
இவ்வாறாயின் சில நேரங்களில் மட்டும் நல்லோராயிருக்க முயற்சிப்பதோடு நாம் திருப்தி அடைய வேண்டியதுதானா?
நாம் போதுமான அளவிற்கு நல்லவராக இருக்கிறோமா?(ARE WE GOOD ENOUGH?)
ஏனெனில் எப்பொழுதுமே நல்லவராக இருப்பது மிகவும் கடினம். இது ஓர் அடைய முடியாத இலக்கு என பலர் கூறுகின்றனர்.நாம் செய்த தீமைகளை சரிக்கட்டும் அளவிற்கு அதிகமதிகமான நன்மை செய்வது மட்டுமே நம்மால் கூடிய காரியம் என்பது இவர்கள் கருத்து. இது நமது நடத்தைகளை எல்லாம் ஒரு தராசில் வைத்து நாம் செய்யும் நல்லவைகள் எப்பொழுதுமே தீமைகளை விட அதிகமாக உள்ளவாறு பார்த்துக்கொள்வதே நமது வேலை என்பது போல் உள்ளது. இதனால் நாம் செய்யும் நன்மை அல்லது தீமை இவைகளில் எது அதிகம் என அறியும் சோதனையாகவே நம் வாழ்க்கை மாறிவிடும்.
தேவன் நம்மை ஓர் நோக்கத்திற்காக படைத்துள்ளார், சோதிப்பதற்காக அல்ல. நம்மை நற்செயல்களுக்காகவே அவர் படைத்திருப்பதாக வேதம் கூறுகிறது. நற்செயல்களை செய்வதற்காகவே நம்மை அவர் படைத்தாரே தவிர நாம் நன்மை அதிகமாக செய்கிறோமா அல்லது தீமை அதிகமாக செய்கிறோமா என்பதை சோதித்துப்பார்ப்பதற்காக அல்ல. உண்மையான வாழ்க்கை என்பது நாம் பெற்றுக்கொள்ளும்படியாக தேவன் நமக்களித்த முழுமையான நல் வாழ்க்கையினை வாழ்வதே ஆகும். ஆகையினால் நம்மில் உள்ள நல்லவை முதலில் உயிர்பெற வேண்டும்.
ஒரு தராசு என்பதைவிட நம் வாழ்க்கை ஒரு நிறைவான பாத்திரம் போன்றே உள்ளது. இந்த பாத்திரம் நாம் செய்யும்படி தேவன் விரும்பிய நன்மைகளினால் விளிம்பு வரை நிரப்பப்பட்டுள்ளதாய் இருக்கின்றது. நாம் நம்மால் இயன்ற மிகப்பெரிய நன்மை ஒன்றினைச் செய்யும்போது இது தேவனின் நோக்கத்தை நிறைவேற்றும் நம் கடமையே தவிர நாம் இப்பாத்திரத்தில் எதையும் கூட்டுவதாக ஆகாது.
ஆயினும் பெரும்பான்மையான சமயங்களில் இப்பாத்திரம் குறைவுபடும்படி தேவனின் நோக்கத்தினின்று நாம் மாறுபாடாக நடந்து இப்பாத்திரத்திலுள்ளதை எடுத்துப்போடுகிறோம். நாம் ஒரு தவறான செயலினைச் செய்யும்போதோ அல்லது ஒரு நற்செயலினை செய்யத்தவறும்போதோ இவ்வாறாகின்றது. நமது சுய ஆதாயத்திற்காகவோ அல்லது நமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டோ நாம் ஒரு நற்செயலைச் செய்தாலும் இவ்வாறே ஆகும். உதாரணமாக நமக்கு பின்னாளில் தேவைப்படும் ஒரு உதவிக்காகவே நம் கணவரிடமோ அல்லது மனைவியிடமோ அன்பாய் இருப்பதாக நடந்து கொண்டால் உண்மையாகவே நன்மை செய்யும் தேவனின் நோக்கத்தினின்று நாம் தவறுகிறோம். நம் வாழ்க்கை முழுவதும் இப்பாத்திரத்தினின்று நாம் எடுத்துக்கொண்டே இருந்து முடிவில் தேவன் விரும்பிய முழுமையான நல்வாழ்க்கையைப் பெறுவதினின்று நாம் குறைவுபடுகிறோம்.
எனவே நாம் உண்மையாகவே நல்லோராக மாற வழி நம்மை படைத்த தேவன் ஒருவரிடமே உள்ளது. இதில் தேவன் எப்படி நமக்கு உதவ முடியும் ? தீயனவற்றைக் கட்டுப்படுத்தி நல்லனவற்றிற்கு உயிரூட்ட அவர் என்ன செய்துள்ளார் ?
தேவனின் தீர்வு (GOD'S SOLUTION):
இப்புவியிலுள்ள அனைத்து மக்களையும் தீமை ஏதுமின்றி மறுபடியும் புதிதாய் உருவாக்க தேவனுக்கு வல்லமை உண்டு. எனினும் தமது படைப்பின் கிரியையினை மதித்து தாம் படைத்ததை பாதுகாக்க அவர் சித்தம் கொண்டார். நமது வாழ்வில் வேறுவகையில் இடைப்பட்டு தமது வல்லமையை விளங்கப்பண்ணவும் நம் மீது சாத்தான் வைத்துள்ள பிடியினை நிர்மூலமாக்கி நம்மில் இருந்த நல்லவை புதுவாழ்வு பெற நம்மை உயிர்ப்பிக்கவும் அவர் தீர்மானித்தார்.
தேவன் படைத்த இந்த உலகம் தான் அவருக்கும் சாத்தானுக்கும் நடைபெறும் யுத்தத்தின் போர்க்களம். எனவே அவர் இயேசு என்கின்ற மீட்பரை சாத்தானையும் அவன் செயல்களையும் எதிர்கொள்ளும்படிக்கு இவ்வுலகிற்கு அனுப்பினார். சாத்தான், இந்த இயேசு என்கிற மீட்பருக்கு(மஸீஹாவிற்கு) எதிராக அவன் அறிந்த அனைத்து தந்திரங்களையும் ஏவினான். கபடான மனிதர்களால் இயேசு தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டு பல பாடுகளுக்கு உள்ளானார். உயர்வான அவரது கீர்த்தி பொய்களால் சிதறடிக்கப்பட்டது. இறுதியாக ஒரு நியாயமற்ற அரசாங்கத்தை பயன்படுத்தி அவர் செய்யாத குற்றங்களுக்காக சாத்தான் அவர் கொலை செய்யப்படும்படி செய்தான். இயேசு என்னும் மஸீஹா இவை அனைத்துக்கும் பொறுமையாக தம்மை ஒப்புக்கொடுத்தார். ஆனால் இச்செயல்கள் ஒருபோதும் அவரை மேற்கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் தீமையை தீமையால் எதிர்கொள்ளவில்லை. அவர் தீமையை நன்மையால் வெற்றி கொண்டார்.
நம் மீட்பராகிய இயேசு சாத்தானை முறியடிக்கும்படிக்கு அவனது இறுதியான கொடும் ஆயுதமான மரணத்தை அவரே தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டு தம்முடைய உயிர்த்தெழுதலால் அதனை மேற்கொண்டார். சாத்தான் வசம் உள்ள மிகக்கொடியதான மரணம் என்னும் தீங்கினை வெல்ல தமக்கு வல்லமை உண்டு என்பதினை இயேசு நிரூபித்தார். அவர் ஒருவரே இவ்வுலகில் வாழ்ந்தவர்களில் மரணம் என்னும் தீமையை வென்றவர். சாத்தானை விட பலமிக்கவர் தாமே என இயேசு இவ்வுலகிற்கு காண்பித்தார். அவரே சாத்தானின் பலத்த கட்டுகளினின்று நம்மை விடுவித்து நமக்கு புத்துயிர் அளிக்க வல்லவர். நம்மில் உள்ள நன்மைகள் மீண்டும் உயிர் பெறச்செய்யவல்ல பலம் அவரிடம் மட்டுமே உண்டு.
அவர் தீமைகளை மேற்கொள்ளும் தமது வல்லமையை எவ்வாறு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ?
மீட்பராகிய (மஸீஹாவாகிய)இயேசுவை பின்பற்றுதல்(FOLLOWING JESUS THE MESSIAH):
ஒரு காலத்தில் உலகில் உள்ள எல்லாச்சிறைகளிளும் அதன் காவலர்களிலும் தான் மிகவும் பலமிக்கவன் எனத் தன்னை ஒருவன் உயர்த்திக்கொண்டான். இதனை கேள்விப்பட்டு சிறைக்காவலர்கள் அவனை பிடிக்கும்படிக்குச் சென்றார்கள். ஆனால் அந்த மனிதன் திடீரென அவர்களிடமிருந்து மறைந்துகொண்டான். அவன் அந்த சிறைக்காவலர்களைவிட பலசாலியா? இல்லையா?
இதேபோன்று இன்னொருவனும் எல்லாச்சிறைகளிளும் அதன் காவலர்களிலும் தான் மிகவும் பலமிக்கவன் எனத் தன்னை உயர்த்திக்கொண்டான். சிறைக்காவலர்கள் அவனை பிடிக்கும்படிக்குச் சென்றபோது அவன் வந்து அவர்களை எதிரெதிராக சந்தித்தான். அவர்கள் அவனைப்பிடித்து அடித்து அவனைக்கட்டி சிறைகளினூடே உள்ள ஓர் இருட்டறையிலே அடைத்து அவனுக்கு காவல் வைத்தார்கள். சிறை அதிகாரி தன் சக தோழர்களுடன் அவனை எள்ளி நகையாடியவண்ணம் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சீக்கிரம் அவர்கள் சிறைக்குள் இருந்து வந்த ஒரு சத்தத்தை கேட்டார்கள். அந்த மனிதன் தன் விலங்குகளை உடைத்தெறிந்து, சிறைக்கதவுகளைத் தகர்த்தெரிந்து, காவலர்களை விரட்டியடித்து ஏனைய சிறை அறைகளையும் ஒவ்வொன்றாகத் திறந்து, "இச்சிறையினின்று விடுதலை பெற விரும்புவோர் என் பின்னே வாருங்கள்" என அறைகூவினான்.
சில கைதிகள் பயந்தார்கள். இந்த மனிதனுடன் சேர்ந்தால் அவன் பிடிபடும்போது தாங்களும் அவனோடு கூட பிடிபட்டு இப்போதிருப்பதைவிட பன்மடங்கு வேதனைகளை அனுபவிக்க நேரிடும் என அவர்கள் அச்சம் கொண்டனர். ஆனால் வேறு சிலர், "பார், இவனுக்கு இவர்கள் தங்களால் ஆனமட்டும் தீங்கு செய்து துன்புறுத்தியும், இவர்களைவிட அவன் மிகவும் பலசாலி எனக்காட்டிவிட்டான்., நாமும் அவனை பின்பற்றுவோம், வாருங்கள் " எனக் கூறினார்கள்.
சிறையினின்று அவனைத் தொடர்ந்து பின்பற்றி வெளியேறினவர்கள் அவன் எல்லாச் சிறைகளையும் தகர்த்தெறிந்து காவலர்களை முறியடிக்கும் தனது வல்லமையை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதைக்கண்டார்கள். இதனால் அவர்கள் அவனை பின்பற்றி நேர்மையான அவனது ராஜ்ஜியத்தில் பிரவேசித்தார்கள்.
இவ்வாறே மீட்பராகிய (மஸீஹா) இயேசுவும் தம்மை நம்பி தம்வாழ்வில் அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் மறுபடியுமாக புத்துயிர் பெறசெய்ய வாக்களிக்கிறார். தாம் அடிக்கப்பட்டும் வன்சிறையாகிய தீங்கினின்று விடுதலையை சுதந்தரித்துக்கொண்ட சிறைக்கைதி அவரே. அவர் நம்மை ஒரு புதிய நன்மையான வாழ்க்கை வாழ தம்மை பின் பற்றி வரும்படி அழைக்கிறார்.
மீட்பராகிய(மஸீஹா) இயேசுவை நாம் பின்பற்றும்போது நடப்பது என்ன ?
மீட்பர்(மஸீஹா)இயேசுவில் வாழ்வு (LIFE IN JESUS THE MESSIAH):
நம்மில் உள்ள நல்லவற்றை இயேசு உயிர்ப்பிக்கும்போது சரியானவைகளை தெரிந்துகொள்ள நாம் தயாராகின்றோம். நற்செயல்கள்புரியும் ஆர்வம் வெளியரங்கமாக இல்லாமல் நம் உள் மனதிலிருந்து வருகின்றது. நாம் நல்லவை செய்திட புது பலம் பெறுகிறோம். நாம் புதிய மனிதர்களாக மாறுவதாக பைபிள் கூறுகிறது. தேவனே இப்புதுவாழ்வின் ஊற்று.
இன்னும் நம்மில் ஓர் பிரச்சனை உண்டு. நம்மில் உள்ள பழைய தீய எண்ணங்கள் இன்னும் நம்முள் வாசம் செய்கிறது. நாம் பரலோகம் செல்கையில் நம்மில் உள்ள இந்த தீயனவற்றை எல்லாம் நீக்கி தேவன் நம்மை ஆரம்பத்தில் படைத்தவண்ணமாகவே அவர் நம்மை மாற்றும் படிக்கு வாக்களிக்கிறார். அது வரையில் நம்முள்ளே நல்லவற்றிற்கும் தீயவற்றிற்கும் நடக்கும் இப்போராட்டம் இருக்கும்.
உலகப்பிரகாரமாக வாழ வெளியரங்கமான தாக்கத்திற்கும் நாம் உட்படுகிறோம். நாம் வாழும் இவ்வுலகு நடுநிலமையானது அல்ல. சூழ்நிலைகளும் பிற மனிதர்களும் நம்மை உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு ஒத்துப்போகும்படி தூண்டுகிறார்கள்.
உதாரணமாக நம் உடன் பணியாளர்கள் பணியில் அவர்கள் அலுவலகத்தின் நேரத்தையும், பொருட்களையும் ஏமாற்றி எடுத்துக்கொண்டு தவறு செய்யும் போது மேலிடத்திற்கு நாம் தெரியப்படுத்துவதை விரும்பமாட்டர்கள். நாமும் அவ்வாறே நடந்துகொள்ளவேண்டுமென்றும், நாமும் தவறு செய்தால், நாம் அவர்களின் தவறை மேலிடத்திற்கு சொல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டாகும் என்பதால், நம்மை நிர்பந்தம் செய்வார்கள். சாத்தானும் நமது புதிய வாழ்வை எதிர்ப்பான். பொய்களால் நம்மை ஏமாற்றி நம்மை அழித்திட முயற்சி செய்வான்.
இப்போராட்டத்தில் தேவன் நமக்கு எவ்வாறு உதவுவார் ?
இப்புதிய வாழ்க்கையை வாழ்தல் (LIVING THIS NEW LIFE):
தேவன் நம்மை கைவிடுவதில்லை. அவர் மீட்பர் இயேசுவின் மூலம் நம்மில் உள்ள நல்லவற்றை புதுப்பிப்பதோடு மட்டுமின்றி இப்புதிய வாழ்க்கையினை நாம் வாழ முற்றிலும் வகை செய்கிறார். அவர் மூன்று முக்கியமான காரியங்களை நமது அர்த்தமுள்ள புதிய நல்வாழ்க்கைக்குத்துணையாக வைத்துள்ளார். அவை பரிசுத்த வேதாகமம் (பைபிள்), பரிசுத்த ஆவி மற்றும் ஒரு புதிய ஐக்கியமான திருச்சபை (சர்ச் - CHURCH) என்பனவாகும்.
பைபிள் (Bible) நம் வாழ்வின் வழிகாட்டி ஆகும். சாத்தானின் பொய்களை எதிர் கொள்ள இது உதவும். இதில் நாம் இப்போது மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் கைக்கொள்ள விரும்பும் தேவனின் சட்டங்கள் மட்டுமின்றி இவ்வுலகைப்பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப்பற்றியும் தேவனின் தொலை நோக்குப் பார்வையையும் நாம் கண்டுக்கொள்ளமுடியும். பைபிள் தேவனின் வார்த்தை. இது தேவனின் சித்தத்தை நாம் புரிந்துகொள்ள நமக்கு வழி காட்டுகிறது. இது இல்லாவிடில் நாம் தேவனின் திட்டத்தினின்று விலகிவிடுவோம். நாம் நடு நிலையோடு இல்லாததினால் நமது எண்ணங்களை சீர்படுத்த தேவனின் வார்த்தை அவசியம்.
பரிசுத்த ஆவி(Holy Spirit) என்பது மீட்பராகிய (மஸீஹா) இயேசுவின் மூலம் நாம் மீட்கப்பட்டு புத்துயிர் பெறும்போது நம்முள் வசிக்கும் தேவனின் ஆவியாகும். இயேசுவினால் உயிர்ப்பிக்கப்பட்டவர்களின் எண்ணங்களும் செயல்களும் தேவனின் சித்தத்தினின்று வேறுபடுமானால் அந்த நபருக்கு இதனை அறிவிப்பதும் அவனுள்ளிருக்கும் இந்த தேவனின் பரிசுத்த ஆவியே. அவனுக்குள் வசிப்பது தேவனாக இருப்பதால், அவன் சாத்தானுக்கும் அவன் சேனைக்கும் பயப்பட வேண்டுவதில்லை. அந்த நபர் தனக்குள்ளாக இருக்கும் பரிசுத்த ஆவியின் குரலைக்கேட்டாலே அவன் சரியான முடிவுகள் எடுத்து தேவனின் சித்தத்தை பின்பற்றுவான்.
திருச்சபை(Church) என்பது தேவனின் மக்களால் ஆன ஓர் கூட்டமைப்பு (ஐக்கியம்). தேவனின் குடும்பமான இந்த புதிய குடும்பத்தில் நாம் அங்கமாக மாறுகிறோம். இந்த நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு பல வழிகளில் பயன்படுகிறது. கிறிஸ்துவுக்குள்ளாக ஆன புதிய வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாக இந்த திருச்சபை வழிகாட்டுகிறது.மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் தாக்கத்தால் தேவனின் வார்த்தையினை மீறாதபடி வாழ மிக அதிகமான விலை கொடுப்பினும் அதனை மனமுவந்து செய்து முன்மாதிரியாகத்திகழும் நன் மக்களைக்கொண்டது இத்திருச்சபை. இந்த முன் மாதிரியாகிய மக்கள்தான் அவர்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவுக்குள்ளாக ஆன புதிய வாழ்க்கைக்கு ஓர் அடையாளம். வாழ்க்கையின் கரடுமுரடான பாதையில் நம்மை வழி நடத்திச்செல்லும் ஊக்கத்தினை கொடுப்பது இத்திருச்சபையே.
இந்த மூன்று காரியங்களில் புதியதாக கிறிஸ்துவுக்குள் வந்த ஒருவன் ஏதாவது ஒன்றில் குறைவுபட்டாலும் சாத்தானின் கொடிய வலைக்குள் அவன் விழ நேரிடலாம். தேவன் கொடுத்த இந்த மூன்று காரியங்களாகிய பைபிள், பரிசுத்த ஆவி மற்றும் திருச்சபை ஆகிய இவைகளின் துணை இன்றி ஒருவரும் இவ்வுலகின் தீமைகளை எதிர்கொள்ள முடியாது.
கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்க்கை நம்மை நியாயத்தீர்ப்பு நாளுக்காக ஆயத்தப்படுத்துகின்றதா?
நியாயத்தீர்ப்பின் நாள் (JUDGMENT DAY)
நாம் செய்த நல்லவை மற்றும் தீயவைகளை கணக்கில் கொண்டு தேவன் நம்மை நியாயம் தீர்ப்பார் என நாம் அவ்வப்போது நினைக்கிறோம். ஆயினும் நமது செயல்கள் நமக்குள் வசிப்பவைகளின் பிரதிபலிப்புகளே. தேவன் நம்மை அவரிடமிருந்து வந்த புதிய வாழ்வினை நாம் பெற்றுக்கொண்டோமா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே நியாயம் தீர்க்கிறார்.
நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது நம்மில் அவர் கொடுத்த புது வாழ்வு இருந்தால் அவர் நம்மிடையே உள்ள கெட்டவைகளை நீக்கிவிடுகிறார். நாம் அவர் படைத்தவண்ண்மாகவே மாறிவிடுகிறோம். அவர் நம்மை பரலோகத்தில் ஏற்றுக்கொள்கிறார். இப்புதிய வாழ்வு நம்மிடயே இல்லையெனில் நல்லவை என நாம் நினைப்பவைகளை நம்மினின்று நீக்கி சாத்தானுக்கும் அவன் சேனைக்கும் ஆயத்தப்படுத்தப்பட்ட நரகம் என்னும் இடத்திற்கு நாம் அனுப்பப்படுவோம்.
கிறிஸ்து அளித்த இந்த புதிய ஜீவன் உங்களில் உள்ளதா? நீங்கள் உண்மையிலேயே நன்மக்களாக இருக்க விரும்புகிறீர்களா?
உங்கள் தீர்மானம் (YOUR DECISION):
அதிகமான மதங்களாலும், அறிவு, ஒழுக்கம் மற்றும் சட்டங்களினாலும் ஒரு மனிதனுக்கு புதிய ஜீவன் கிடைப்பதில்லை. சாத்தானின் பலத்த பிடி தகர்க்கப்படவேண்டும், புதிய ஜீவன் உங்களில் நுழையவேண்டும். எந்த ஒரு மதமோ, தீர்க்கதரிசியோ அல்லது பரிசுத்தவான்களோ இந்த புதிய ஜீவனை உங்களுக்குத் தர முடியாது, அல்லது சாத்தானின் தீய செயல்களினின்று உங்களை பாதுகாக்க முடியாது.
உண்மையான நல்வாழ்வுக்கான திறவுகோல் இயேசு என்கிற மீட்பர் (மஸீஹா) நமக்காகச் செய்த செயலில் மட்டுமே உள்ளது. அவர் ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டினார். தீமையின் சக்தி அவரை அழிக்க தாமே ஒப்புக்கொடுத்து பின் தமது நிகரற்ற வல்லமையினால் உயிரோடெழுந்து அதனை மேற்கொண்டார். இயேசுவாகிய இந்த மீட்பர் (மஸீஹா) தம்மை அண்டிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இந்த ஜீவனைத் தர விரும்புகிறார்.
பைபிள் கூறுகிறது : " அவரை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் தேவனின் பிள்ளைகளாகும் உரிமையை அவர் கொடுத்தார்."
நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் அவரிடம் புதிய ஜீவனை பெற்றுக்கொள்ள விசுவாசத்துடன் கேட்பதே ஆகும். அவர் மீது நம்பிக்கை வைப்பவர்களெல்லாம் மீண்டும் பிறந்து அவரின் பிள்ளைகளாகின்றனர். பழைய வாழ்வின் அவமானங்களெல்லாம் கழுவப்பட்டு தேவனின் புதிய குடும்பத்தின் அங்கத்தினர் என்கின்ற பெருமை அடைகின்றோம்.
ஆசிரியர் உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறார். அவரோடு தொடர்பு கொள்ள இங்கே சொடுக்குங்கள்.
Source: நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
Comment Form under post in blogger/blogspot